பழனி முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு


பழனி முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 8 Nov 2018 10:00 PM GMT (Updated: 8 Nov 2018 10:35 PM GMT)

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்க இருப்பதை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

பழனி,


முருகப்பெருமானின் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. கடந்த 2006-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோவிலில் கும்பாபிஷேக பணிகளை மேற்கொள்ள கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் முடிவு செய்துள்ளது.

முன்னதாக கோவிலில் என்னென்ன திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆய்வு செய்து, ஐகோர்ட்டு கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீராய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன், செயற்பொறியாளர் வெண்ணிலா, மதுரை மண்டல அறநிலையத்துறை ஸ்தபதி ஜெயராமன், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் கட்டிடக்கலை பேராசிரியர் பாலாஜி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நாகலிங்கம் மற்றும் அதிகாரிகள் இடம்பெற்று உள்ளனர்.

இந்த குழுவை சேர்ந்த அதிகாரிகள் நேற்று பழனி மலைக்கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து மூலவர் சன்னதி, பிரகாரம், பரிவார தெய்வங்களுக்கான சன்னதி ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் கோவிலின் மேல்தளத்தில் உள்ள ராஜகோபுரம், தங்ககோபுரம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கோபுரங்களில் உள்ள சிலைகள் சேதம் அடைந்துள்ளதா? அவ்வாறு சேதம் அடைந்திருந்தால் எந்த அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை பழமை மாறாமல் எப்படி புதுப்பிப்பது என்பது குறித்து கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

மேலும் கோபுரங்கள் சீரமைப்பு பணியின்போது, சிமெண்டு பூச்சு இல்லாமல் எவ்வாறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கோவில் அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து இடங்களையும் பார்வையிட்ட அதிகாரிகள் தங்களின் இறுதி அறிக்கையை ஐகோர்ட்டு கமிட்டியிடம் விரைவில் சமர்ப்பிப்போம் என தெரிவித்து சென்றனர்.

இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர், கும்பாபிஷேக பணிகள் தொடர்பாக நேற்று மலைக்கோவிலில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தண்ணீரால் கோவில் முழுமையும் சுத்தப்படுத்துவது, ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களின் சீரமைப்பு மற்றும் கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுவது, மின்சார வசதியை மேம்படுத்துவது மற்றும் மின்விளக்குகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த குழுவினரின் இறுதி அறிக்கை ஐகோர்ட்டு கமிட்டியிடம் சமர்ப்பிக்கப்பட்டதும், ஐகோர்ட்டு கமிட்டி அதற்கு ஒப்புதல் அளிக்கும். அதன் பின்னர் பழனி மலைக்கோவிலில் பாலாலய பூஜை நடத்தப்பட்டு கும்பாபிஷேக பணிகள் தொடங்கும். வருகிற 2019-ம் ஆண்டு இறுதிக்குள் பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனர். சீராய்வு குழுவினர் ஆய்வின் போது, பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், செயற்பொறியாளர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story