சென்னை அதிவிரைவு ரெயிலில்: பழனி-திண்டுக்கல் இடையேயான கட்டணத்தை குறைக்க வேண்டும் - பயணிகள் வலியுறுத்தல்
பழனியில் இருந்து திண்டுக்கல் வரை பயணிகள் ரெயில் போல் இயக்கப்படும் சென்னை அதிவிரைவு ரெயிலின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பழனி,
பழனியில் இருந்து திண்டுக்கல், மதுரை, சென்னை, திருச்செந்தூர், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பாலக்காடு-சென்னை இடையே அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற ஊர்களுக்கு பயணிகள் மற்றும் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.
பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் அதிவிரைவு ரெயில் பழனிக்கு தினசரி மாலை 5.55 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து 6.05 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல் வழியாக சென்னைக்கு செல்கிறது. இந்த ரெயிலில் பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை செல்லும் பயணிகளும் செல்கின்றனர்.
பழனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு பயணிகள் ரெயிலில் ரூ.15-ம், விரைவு ரெயிலில் ரூ.35-ம் அதிவிரைவு ரெயிலில் ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பயணிகள் ரெயில் சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி உள்ளிட்ட நிறுத்தங்களில் நின்று செல்லும். இதே நிறுத்தங்களில் விரைவு ரெயிலும் நின்று செல்கிறது. இந்த நிலையில் சென்னை அதிவிரைவு ரெயிலும் பயணிகள், விரைவு ரெயிலை போன்று சத்திரப்பட்டி, ஓட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்கிறது.
ஆனால் அதிவிரைவு ரெயிலுக்கான கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறுகையில், பாலக்காடு-சென்னை அதிவிரைவு ரெயிலில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட போதிலும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்கிறது. இதனால் நாங்கள் பெரிதும் அவதியடைகிறோம். எனவே அதிவிரைவு ரெயிலை பழனி-திண்டுக்கல் இடையே எந்த நிறுத்தத்திலும் நிற்காமல் இயக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story