மதுரையை டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு


மதுரையை டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
x
தினத்தந்தி 8 Nov 2018 11:20 PM GMT (Updated: 8 Nov 2018 11:20 PM GMT)

மதுரையை டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

பேரையூர்,

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.5.60 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 2-ம் நிலை குப்பை சேகரிக்கும் வாகனத்தினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:- தற்போது பருவ மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் சுற்றுப்புறச் சூழலையும், சுகாதாரத்தையும் பேணி காக்க வேண்டும். டெங்கு முன்தடுப்பு நடவடிக்கையாக தூய்மைப் பணியில் அரசு அலுவலர்கள் களத்திற்கு சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தை டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாக்க முயற்சி எடுத்து வருகிறோம். இதற்காக பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பினை தர வேண்டும்.

சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், எதிர்கால தலைமுறையினை பாதுகாக்கவும் பிளாஸ்டிக் தடை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் துணிப்பைகளை பயன்படுத்த முன் வர வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்சியில் சமுக நல தாசில்தார் சசிகலா, செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, முன்னாள் ஒன்றியக் குழு துணைத்தலைவர் டாக்டர் பாவடியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story