பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து மாணவர் காங்கிரசார் மவுன ஊர்வலம் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்


பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து மாணவர் காங்கிரசார் மவுன ஊர்வலம் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்
x
தினத்தந்தி 8 Nov 2018 11:57 PM GMT (Updated: 8 Nov 2018 11:57 PM GMT)

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை கண்டித்து புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் நேற்று மவுன ஊர்வலம் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.

புதுச்சேரி,

நாட்டு மக்களிடம் புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அந்த நாளை காங்கிரஸ் கட்சி கருப்பு தினமாக அறிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை மவுன ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்திற்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வல்சராஜ் மற்றும் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி சென்றனர்.

ஊர்வலம் அண்ணாசிலை அருகில் இருந்து தொடங்கி அண்ணாசாலை, நேருவீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு அவர்கள் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின்போது வங்கிகளில் காத்து நின்று உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பிரதமர் மோடி பணமதிப்பு இழப்பு முடிவை எடுத்தார். அப்போது கருப்பு பணம், தீவிரவாதம், கள்ளநோட்டு ஒழியும் என்றார்கள். அதனை அமல்படுத்தியபோது ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி மக்களிடம் புழக்கத்தில் இருந்தது. அதில் ரூ.17 ஆயிரம் கோடி தான் வங்கிக்கு வரவில்லை. ரூ.32 கோடி கள்ளநோட்டாக இருந்தது. பாரதீய ஜனதா கட்சியினர் வைத்திருந்த கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பணம் எடுக்க வங்கிகளில் வரிசையில் நின்ற 119 பேர் உயிரிழந்தனர்.

இந்த திட்டத்தை கொண்டு வரும் போது பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கூறினர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி இந்த திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வந்துள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story