தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம்: பள்ளியில் கல்விப்பணியோடு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியும் மேற்கொள்ள வேண்டும் மாவட்ட கல்வி அலுவலர் அறிவுரை
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பேசினார்.
செய்யாறு,
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி மாவட்ட அளவில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கல்வி மாவட்ட அலுவலர் பி.நடராஜன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன், பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எம்.எஸ்.சுகானந்தம் வரவேற்றார்.
கூட்டத்திற்கு கல்வி மாவட்ட அலுவலர்(பொறுப்பு) பி.நடராஜன் பேசியதாவது:-
செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், தங்களின் பள்ளியில் தூய்மையை பராமரிக்க துரிதமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்கவும், மாணவர்களுக்கு அதனால் பாதிப்பு வராமல் தடுக்கவும் ஒவ்வொரு பள்ளி தலைமைஆசிரியரும் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலகத்தினை அணுகி போதிய அளவிற்கு நிலவேம்பு கசாயம் பெற்று வாரத்திற்கு ஒரு முறை மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும்.
பள்ளியின் தூய்மைப் பணிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்து டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் கல்வி பணியோடு பள்ளி வளாகத்தினை தூய்மைப்படுத்தி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் பூதேரி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story