கூடலூர் அருகே: இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கேரள லாரி தடுத்து நிறுத்தம்
கூடலூர் அருகே இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கேரள லாரியை போலீசார் மற்றும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
கூடலூர்,
கேரள மாநிலத்தில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் தமிழக எல்லை பகுதியில் அதிகளவு கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் வனத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதாக எல்லையோர கிராம மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்தனர். மேலும் சிலர் லாரிகளை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்த வேண்டும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரளாவுக்கு செல்லும் மலைப்பாதையில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்காக மாநில எல்லையில் ஒரு லாரி நிற்பதாக தேவாலா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் நேற்று மாலை 5 மணிக்கு தமிழக- கேரள எல்லைக்கு விரைந்து சென்றனர். அப்போது மாநில எல்லையில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அதன் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசி கொண்டிருந்தது.
மேலும் சாலை முழுவதும் ரத்தம் வழிந்தோடியது. இதனால் சந்தேகம் அடைந்த தேவாலா போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது அதில் இறைச்சி கழிவுகள் இருந்ததை கண்டனர். பின்னர் தமிழக பகுதிக்குள் கழிவுகளை கொண்டு வரக்கூடாது என எச்சரித்தனர். மேலும் கேரளாவுக்கு அந்த லாரியை திருப்பி அனுப்பினர். அப்போது கேரள வனப்பகுதியில் அம்மாநில போலீசாரும், வனத்துறையினரும் நின்றிருந்தனர். இதனால் தேவாலா போலீசார் மற்றும் வனத்துறையினர் மாநில எல்லையில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, கேரள பகுதியில் உள்ள இறைச்சி கழிவுகளை ஏற்றி கொண்டு வழிக்கடவு பகுதிக்கு லாரி வந்தபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் லாரி கண்ணாடியை உடைத்துள்ளனர். இதனால் அம்மாநில போலீசாரும், வனத்துறையினர் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்த லாரியை தமிழக பகுதிக்குள் அனுப்பி வைத்துள்ளனர். இதை அறிந்து மாநில எல்லையில் இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த லாரியை மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story