நெல்லை அருகே பரபரப்பு: ஓடும் பஸ்சில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை


நெல்லை அருகே பரபரப்பு: ஓடும் பஸ்சில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 10 Nov 2018 4:00 AM IST (Updated: 9 Nov 2018 11:31 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே ஓடும் பஸ்சில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.

நெல்லை, 

நெல்லை அருகே ஓடும் பஸ்சில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.

இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பஸ்சில் மயங்கி கிடந்தனர்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சாத்தான்குளத்துக்கு நேற்று மதியம் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் ஒரு ஆணும், பெண்ணும் குழந்தையுடன் இருந்தனர். திடீரென்று அந்த ஜோடி மயங்கினர். அதை முதலில் பயணிகள் கவனிக்கவில்லை.

மூலைக்கரைப்பட்டி அருகே பஸ் சென்றபோது, குழந்தை அழுததும் பயணிகள் அங்கு பார்த்தபோது தான் அந்த ஆணும், பெண்ணும் மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனே பஸ்சை டிரைவர் மூலைக்கரைப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ஓட்டி சென்றார்.

விஷம் குடித்து தற்கொலை

அங்கு அந்த ஆணையும், பெண்ணையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், தற்கொலை செய்து கொண்ட 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்காதல் ஜோடி

போலீசார் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்த 2 பேரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பேய்க்குளம் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் மணிகண்டன் (வயது 29), உடன்குடியை சேர்ந்த இசக்கிமுத்து மகள் இலக்கியா (21) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

மணிகண்டன், அவருடைய தம்பி நயினார் (24) ஆகிய இருவரும் கொத்தனார்கள். மணிகண்டனுக்கு மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

நயினாருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியாவுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரஞ்சனா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. இலக்கியா பிளஸ்-2 வரை படித்து உள்ளார். அண்ணன், தம்பி இருவரும் ஒரே ஊரில் தனித்தனியாக வசித்து வந்தனர்.

மாயம்

இந்த நிலையில், இலக்கியாவுக்கு கணவர் நயினாரின் அண்ணன் மணிகண்டனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் இரு வரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் அவர்கள் இருவரும் ஓடிப்போய் தனிக்குடித்தனம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த 5-ந்தேதி இலக்கியா தனது குழந்தை ரஞ்சனாவை அழைத்துக் கொண்டு, தீபாவளிக்கு உடன்குடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார்.

அதன்பிறகு நயினார் தனது மாமனார் இசக்கிமுத்து விடம் விசாரித்தபோது, இலக்கியா அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து நயினாரும், இசக்கிமுத்துவும் பல இடங்களில் இலக்கியாவை தேடினர். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்று கண்டுபிடிக்க முடிவில்லை.

இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி குலசேகரன்பட்டினம் போலீசில் நயினார் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் தேடியதால்...

இதற்கிடையே, நயினாரின் அண்ணன் மணிகண்டனும் வீட்டில் இருந்து மாயமாகி இருந்ததால், அவருடன் தான் இலக்கியா சென்று இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்து அவர்களை தேட தொடங்கினர்.

போலீசார் தங்களை எப்படியும் பிடித்து விடுவார்கள் என்று கருதிய கள்ளக்காதல் ஜோடியினர் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்தனர்.

அதன்படி, நேற்று அவர்கள் இருவரும் விஷம் குடித்து விட்டு, நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி சென்று உள்ளனர். அப்போது அவர்கள் பஸ்சிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை ரஞ்சனாவுக்கு அவர்கள் விஷம் கொடுக்காததால், அவள் உயிர் தப்பினாள்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

குழந்தையை தந்தை நயினாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓடும் பஸ்சில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மூலைக்கரைப்பட்டி, சாத்தான்குளம் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story