பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை: ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்


பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை: ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 10 Nov 2018 3:15 AM IST (Updated: 9 Nov 2018 11:41 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தியதில், ஒரே நாளில் ரூ.1 லட்சம் அபராதம் வசூலானது.

ஊட்டி,


ஊட்டி நகரில் கடந்த 4, 5 மற்றும் 6-ந் தேதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பயன்படுத்தப்படுவதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தனர். அதன் பேரில் பேரூராட்சி அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழுவினர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் நடராஜ், நந்தகுமார், ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட துணியுடன் கூடிய பிளாஸ்டிக் கோட்டிங் போடப்பட்ட பை(ஓவல் பிளாஸ்டிக் பை) பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. டாஸ்மாக் கடையையொட்டி தனியார் மூலம் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் அரை லிட்டருக்கு கீழ் உள்ள தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் சோதனை நடத்திய அதிகாரிகள் ஓவல் பிளாஸ்டிக் பைகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அந்த நகைக்கடைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

ஊட்டி நகரில் துணிக்கடை, பாத்திரக்கடை, மளிகைக்கடை உள்பட மொத்தம் 40 கடைகளில் சிறப்பு கண்காணிப்பு குழுவினர் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட 10 கிலோ ஓவல் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, ரூ.1000 முதல் ரூ.20 ஆயிரம் வரை என மொத்தம் ரூ.57 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

ஊட்டி நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் முரளிசங்கர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நகராட்சி மார்க்கெட், ஊட்டி மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி., எட்டின்ஸ் சாலை, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நேற்று நடத்தப்பட்டது. 25 கடைகளில் சோதனை செய்து 21.5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.62 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. சிறப்பு கண்காணிப்பு குழுவினர் மற்றும் ஊட்டி நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் அபராதம் வசூ லானது. 

Next Story