குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.60 கோடி


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.60 கோடி
x
தினத்தந்தி 10 Nov 2018 3:45 AM IST (Updated: 9 Nov 2018 11:46 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.60 கோடி கிடைத்தது.

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.60 கோடி கிடைத்தது.

காணிக்கை எண்ணும் பணி

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி, 12 நாட்கள் நடந்தது. விழாவில் பல லட்சம் பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபட்டனர். 10-ம் நாள் இரவில் மகிஷா சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு காணிக்கையை கோவிலில் செலுத்தினர். கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணும் பணி, கோவில் கலையரங்கில் கடந்த 5 நாட்கள் நடந்தது.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் செல்லத்துரை தலைமை தாங்கினார். அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் அருணாசலம் (பண்பொழி), செல்வகுமாரி (குற்றாலம்), சங்கர் (நெல்லை), ரத்தினவேல் பாண்டியன் (நாகர்கோவில்), கோவில் தக்காரும், உதவி ஆணையருமான ரோஜாலி சுமதா, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கோவில் ஆய்வாளர் பகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ.2.60 கோடி

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, பிறைகுடியிருப்பு சிவந்தி மகளிர் கல்லூரி மாணவிகள், நெல்லை ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 57 தற்காலிக உண்டியல்கள், 13 நிரந்தர உண்டியல்கள் என மொத்தம் 70 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

இதில் மொத்தம் ரூ.2 கோடியே 60 லட்சத்து 92 ஆயிரத்து 496-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 200 கிராம் தங்கமும், 2 கிலோ 951 கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கடந்த ஆண்டை விட பக்தர்கள் கூடுதலாக ரூ.38 லட்சத்து 55 ஆயிரத்து 683 காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story