சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதாக புகார்: பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முற்றுகை


சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதாக புகார்: பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Nov 2018 9:30 PM GMT (Updated: 9 Nov 2018 6:29 PM GMT)

பாவூர்சத்திரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதாக கூறி, போலீஸ் நிலையத்தை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாவூர்சத்திரம், 

பாவூர்சத்திரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதாக கூறி, போலீஸ் நிலையத்தை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்கியதாக புகார்

நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி நேற்று அதிகாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பாவூர்சத்திரத்தை அடுத்த கே.டி.சி.நகர் அருகே ஒரு லாரியும், காரும் நின்றன. காரில் இருந்தவர் லாரி டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த காருக்கு பின்னால் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அதை கவனித்த கார் டிரைவர் ஆம்புலன்சுக்கு வழிவிடுவதற்காக காரை பின்னால் எடுத்தார்.

அப்போது ஆம்புலன்ஸ் மீது கார் மோதாமல் இருக்க ஆம்புலன்ஸ் டிரைவர் ராமச்சந்திரன் சத்தம் கொடுத்தார். உடனே காரில் இருந்து இறங்கி வந்த பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய சண்முகநாதன், ஆம்புலன்ஸ் டிரைவர் ராமச்சந்திரனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். ஆம்புலன்சும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராமச்சந்திரனை சப்-இன்ஸ்பெக்டர் அவதூறாக பேசி தாக்கியதாக புகார் கூறப்பட்டது.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் திரண்டு வந்து பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் பாவூர்சத்திரம் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story