திண்டுக்கல்லில்: 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு - முகமூடி அணிந்த மர்மநபர் கைவரிசை
திண்டுக்கல்லில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற முகமூடி அணிந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திண்டுக்கல்,
திண்டுக்கல் நாகல்புதூரை சேர்ந்தவர் பாலகுரு (வயது 52). இவர் நாகல்நகர் மேம்பாலம் அருகே சைக்கிள் கடை வைத்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் சிதறி கிடந்தன.
மேலும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1,500-ஐ காணவில்லை. மர்ம நபர், பூட்டை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. இந்த சைக்கிள் கடையின் அருகில், பேகம்பூரை சேர்ந்த ஜபருல்தாரிக் மளிகைக்கடை வைத்துள்ளார். இதற்கிடையே ஜபருல்தாரிக் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டை திறக்க முயன்ற போது சிரமமாக இருந்ததால், அவர் சந்தேகம் அடைந்தார்.
ஒருவழியாக பூட்டை திறந்து உள்ளே சென்ற அவர், கடை முன்புள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தார். அதில் அதிகாலை 3.15 மணிக்கு முகமூடி அணிந்த நபர், இரும்பு கம்பியால் பூட்டை உடைக்க முயற்சிப்பது பதிவாகி இருந்தது. பூட்டை உடைக்க முடியாததால், அப்படியே விட்டு சென்றுள்ளான். எனவே, அந்த நபரே சைக்கிள் கடையில் திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் திண்டுக்கல்லை அடுத்த பாலமரத்துபட்டியை சேர்ந்தவர் அழகுராஜா. இவர் பொன்னகரத்தில் மருந்து கடை வைத்துள்ளார். நேற்று காலை பூட்டுகள் உடைக்கப்பட்டு, கடை பாதி திறந்த நிலையில் கிடந்தது. இதுபற்றி அறிந்ததும் அவர், கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.20 ஆயிரத்தை யாரோ திருடி இருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த பகுதியில் உள்ள மற்றொரு கடையிலும் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தாலுகா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மருந்துக்கடைக்கு அருகில் ஒரு கடை முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் முகமுடி அணிந்த நபர், கையில் இரும்பு கம்பியுடன் வந்து கண்காணிப்பு கேமராவை வேறுதிசையில் திருப்புவது பதிவாகி இருந்தது. மேலும் அந்த நபர், நாகல்நகரில் திருடிய நபரை போன்று இருந்தார். எனவே, 3 கடைகளில் பூட்டை உடைத்து திருடியதும், மளிகை கடையில் திருட முயன்றதும் ஒரே நபராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மர்ம நபரை அடையாளம் காணும் வகையில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் அதிகாலை நேரத்தில் 3 கடைகளில் பூட்டை உடைத்து திருடியது வணிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story