தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டும்: “நேர்மையானவர்களை நம்பியே அரசியலுக்கு வந்துள்ளேன்” தர்மபுரி பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு
தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றும், நேர்மையானவர்களை நம்பியே அரசியலுக்கு வந்துள்ளேன் என்றும் தர்மபுரியில் நடந்த மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி வள்ளலார் திடலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மக்களுடனான பயணம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
என்னை அனைவரும் நம்மவர் என்று செல்லமாக அழைக்கிறார்கள். நம்மவர் என்பது நான் மட்டுமல்ல. நாம் அனைவரும் தான். இங்கு மேடையில் இருப்பவர்களுக்கு பதவிகள் இப்போது வந்தது. ஆனால் நமது கட்சிக்கான பாதை முன்பே வகுக்கப்பட்டு விட்டது. அதை நோக்கி தான் நாம் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.
இந்த மேடையை மறக்க முடியாத மேடையாக பொதுமக்களாகிய நீங்கள் மாற்றி உள்ளர்கள். இந்த மேடையில் கட்சி கொடியை ஒரு தொண்டரை வைத்து ஏற்றியதை நீங்கள் பார்த்தீர்கள். எங்கள் கட்சியில் எந்த பொதுக்கூட்டமாக இருந்தாலும் தொண்டர் தான் கொடி ஏற்றுவார். நமது மக்கள் நீதி மய்யத்தின் கொடி ஒவ்வொரு வீதியிலும் ஏற்றப்பட்டு பறக்கும்.
வேலைவாய்ப்புக்காக இங்குள்ளவர்கள் அருகில் உள்ள பெங்களூரு போன்ற நகரங்களை தேடி செல்ல வேண்டிய நிலையில் உள்ளர்கள். சொந்த ஊரில் இருந்து வேறு வழியில்லாமல் அகதிகளாக பிழைப்புக்காக வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை யாருக்கும் வரக்கூடாது.
இந்த பகுதி மக்கள் புளோரைடு கலந்த நீரை குடித்ததால் பாதிக்கப்பட்டுள்ளர்கள். குறிப்பாக தாய்மார்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். அவர்களின் ரத்தத்தில் புளோரைடு பாதிப்பு உள்ளதா? என பார்க்க வேண்டும். நாளை நமதே என்பது சொல்லாக மட்டும் இருக்காமல் அதை செயல்படுத்த இன்றே பணியை தொடங்க வேண்டும். அதற்கான சக்தி மக்கள் நீதி மய்யத்திடம் உள்ளது.
மக்களுக்கான திட்டங்களை நாங்கள் வகுப்போம். அதை எட்ட மக்கள் நீதி மய்யம் பாடுபடும். தர்மபுரி மாவட்டத்திற்கு என்று திட்டங்கள் உண்டு. அதே போல தமிழகத்திற்கு என திட்டங்களை வகுத்து வருகிறோம். சினிமா புகழால் திடீரென்று அரசியலுக்கு வந்ததாக சிலர் கூறுவார்கள். மக்களாகிய நீங்கள் என்னை நம்புகிறீர்கள். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும். வேலை வாய்ப்பை மக்களுக்கு அரசு தான் உருவாக்கி தர வேண்டும். சிறு தொழில்களின் அற்புத விளைநிலமாக தர்மபுரி உள்ளது.
நாங்கள் பேச்சை விட செயலில் காட்ட வேண்டும் என்பதை விருப்புகிறோம். ஓட்டு உங்களின் அடிப்படை உரிமை. அதை விற்று விடாதீர்கள். ஓட்டால் மட்டுமே புதிய சுதந்திரத்தை பெற முடியும். எனது எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக தான். அதற்காக நான் பாடுபடுவேன். தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே முக்கியம். நேர்மையானவர்களை நம்பியே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். நாம் நினைத்த இலக்கையும், மாற்றத்தையும் நிச்சயமாக பொதுமக்களின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் அடையும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் நடிகை ஸ்ரீபிரியா, கவிஞர் சினேகன், ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி.மவுரியா, ஓய்வுபெற்ற நீதிபதி குருவய்யா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரங்கராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story