காதல் திருமணத்துக்கு உதவியவர் மீது தாக்குதல்: பெண்ணின் சகோதரர்கள் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை


காதல் திருமணத்துக்கு உதவியவர் மீது தாக்குதல்: பெண்ணின் சகோதரர்கள் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 10 Nov 2018 3:00 AM IST (Updated: 10 Nov 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

சகோதரரின் காதல் திருமணத்துக்கு உதவியவரை தாக்கிய வழக்கில், பெண்ணின் சகோதரர்கள் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சங்கரன்கோவில் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.

சங்கரன்கோவில், 

சகோதரரின் காதல் திருமணத்துக்கு உதவியவரை தாக்கிய வழக்கில், பெண்ணின் சகோதரர்கள் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சங்கரன்கோவில் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.

காதல் திருமணம்

சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் முத்தழகன் மகன்கள் ரவிச்சந்திரன் (வயது 28) மற்றும் சண்முகசுந்தரம்( 31).

இவர்களுடைய தங்கை செண்பகசெல்வி. இவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு முத்துக்குமாரின் சகோதரர் சண்முகபிரபு என்பவர் உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதல்

இந்த திருமணத்தில் செண்பகசெல்வியின் குடும்பத்தாருக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் முத்துக்குமார் மற்றும் சண்முகபிரபு மீது ரவிச்சந்திரன், மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் பெரியவர்கள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 16.6.2013 அன்று ரவிச்சந்திரன், சண்முகசுந்தரம், அதே பகுதியை சேர்ந்த பொன்மணி மகன் ரவி (32), கோபால் மகன் ரமேஷ்குமார் ஆகியோர் சேர்ந்து சண்முகபிரபுவை கடுமையாக தாக்கி அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

7 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை சங்கரன்கோவில் சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணக்குமார் குற்றம் சாட்டப்பட்ட ரவிச்சந்திரன், சண்முகசுந்தரம், ரவி ஆகிய 3 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமாக ரூ.1000-ம் விதித்தும், ரமேஷ்குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story