மாவட்டத்தில் ரூ.2,560 கோடிக்கு குறுகிய கால பயிர்க்கடன் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
நாமக்கல்லில் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட கலெக்டர் ஆசியா மரியம், மாவட்டத்தில் குறுகிய கால பயிர்க்கடனாக ரூ.2,560 கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் 2019-20-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையின் முதல் பிரதியை கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டார். அதை இந்திய ரிசர்வ் வங்கியின் நாமக்கல் மாவட்டத்திற்கான உதவி பொது மேலாளர் சேதுராமன், நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் கண்டறியப்பட்டு உள்ள வளங்களின் திறன் அடிப்படையில் நபார்டு வங்கியின் 2019-20-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்டமானது “2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்“ என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை மற்றும் விவசாயம் சாரா தொழில்களில் விவசாயிகளை ஈடுபடுத்தி, அவர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
நபார்டு வங்கியின் 2019-20-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் நாமக்கல் மாவட்டத்திற்கு முன் உரிமை கடனாக ரூ.6,240 கோடி வழங்கிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறுகிய கால பயிர்க்கடனாக ரூ.2,560 கோடியும், வேளாண் தொழில் சார்ந்த விவசாய கட்டமைப்புகள், உணவு மற்றும் பயிர் பதனிடும் தொழில்களுக்கு குறுகிய கால கடனாக ரூ.1,545 கோடியும் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் இலக்கு ரூ.800 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய முன்னுரிமை கடன் கொள்கையின்படி ஏற்றுமதி கடன், கல்வி, வீடு கட்டுமான கடன்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வேளாண் மற்றும் அதை சார்ந்த தொழில்களை விரைந்து மேம்படுத்த அனைத்து வங்கியாளர்களும், அலுவலர்களும் இணைந்து தங்கள் பணியினை அர்பணிப்பு உணர்வோடு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர்பேசினார்.
இதில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அதிகாரி தினேஷ், அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story