கட்டிடம் பழுதடைந்ததால் வீட்டின் தாழ்வாரத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்


கட்டிடம் பழுதடைந்ததால் வீட்டின் தாழ்வாரத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்
x
தினத்தந்தி 9 Nov 2018 11:00 PM GMT (Updated: 9 Nov 2018 7:14 PM GMT)

மேற்பனைக்காட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்ததால், ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு புளியமரத்தடியில் அங்கன்வாடி மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்திற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அங்கு அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டது. இந்த கட்டிடம் பழுதடைந்ததை தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்குள் 2 முறை பழுது பார்க்கப்பட்டது. கடைசியாக 2013-14-ம் ஆண்டில் ரூ.91 ஆயிரத்திற்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

இருப்பினும் சமையல் கூடம், குழந்தைகள் படிக்கும் இடம் ஆகியவற்றின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் அடிக்கடி உடைந்து விழுகின்றன. இதனால் குழந்தைகளை, அந்த பழுதடைந்த கட்டிடத்தில் வைத்து பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும் பழுதடைந்த கட்டிடத்தில் மழை காலங்களில் மின்கசிவு ஏற்பட்டு சுவர்களிலும் மின்சாரம் பாய்கிறது. மழை காலங்களில் மழைநீர் மேற்கூரையின் வழியாக அங்கன்வாடி மையத்திற்குள் கசிவதால், தற்போது இந்த மையத்திற்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கிராம மக்கள் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி அங்கன்வாடி மையத்தை அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் வைத்து நடத்த தொடங்கினர். பல மாதங்களாக தாழ்வாரமே குழந்தைகளின் கல்வி கூடமாக செயல்பட்டு வருகிறது. அதே வீட்டில் சமையல் செய்து குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மேற்பனைக்காடு வடக்கு மற்றும் சற்று தொலைவில் உள்ள மேற்பனைக்காடு பேட்டை பகுதிகளில் உள்ள இரு அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு அங்கன்வாடி பணியாளரே இருப்பதால் உணவு சமைப்பதிலும், பாடங்கள் நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், பழுதான அங்கன்வாடி கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தான் நாங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதை நிறுத்தி வருகிறோம், என்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

Next Story