நெல்லை-தூத்துக்குடியில் ‘சர்கார்’ படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு விஜய் பேனர்கள் அகற்றம்
நெல்லை-தூத்துக்குடியில் ‘சர்கார்’ படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டு இருந்த விஜய் பட பேனர்கள் அகற்றப்பட்டன.
நெல்லை,
நெல்லை-தூத்துக்குடியில் ‘சர்கார்’ படம் ஓடும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டு இருந்த விஜய் பட பேனர் கள் அகற்றப்பட்டன.
‘சர்கார்’ திரைப்படம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ படம் தீபாவளி அன்று வெளியானது. மாநிலம் முழுவதும் பல்வேறு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்களுக்கு எதிராக காட்சிகள் இடம்பெற்று உள்ளதாக கூறி அ.தி.மு.க. வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்டித்து ‘சர்கார்’ படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது தியேட்டர்களுக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த நடிகர் விஜய் பட பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க. வினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புக்கொண்டது. அதன்படி ஒரு சில காட்சிகள் நீக்கிய படம் நேற்று திரையிடப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
நெல்லை-பாளையங்கோட்டை பகுதியில் 5 தியேட்டர்களில் ‘சர்கார்’ படம் திரையிடப்பட்டு உள்ளது. அசம்பாவிதம் ஏற்படாத வகையில் இந்த தியேட்டர்கள் முன்பு நேற்று ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டு இருந்த நடிகர் விஜய் பட பேனர்கள் முழுவதும் அகற்றப்பட்டன. வழக்கம்போல் நேற்று இந்த தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நகர் பகுதியில் உள்ள 2 தியேட்டர்களில் ‘சர்கார்‘ படம் திரையிடப்பட்டது. எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விட கூடாது என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின்படி, 2 தியேட்டர்களிலும் தலா ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஆனால், தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் வைத்து இருந்த விஜய் பட பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும், பரபரப்புக்கிடையே நேற்று படம் வழக்கம்போல் திரையிடப்பட்டது.
Related Tags :
Next Story