கன்னியாகுமரி அரசு பழத்தோட்டம் சுற்றுலா மையமாகிறது இன்று முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்
கன்னியாகுமரியில் உள்ள அரசு பழத்தோட்டம் சுற்றுலா மையமாக மாற்றப்படுகிறது. இன்று முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் அரசு தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பழத்தோட்டம் உள்ளது. இந்த தோட்டம் 1922-ம் ஆண்டு திருவிதாங்கூர் மகாராஜாவால் தொடங்கப்பட்டது. மொத்தம் 31.64 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணையில் மா, சப்போட்டா, பலா, நெல்லி, பப்பாளி உள்பட பல வகையான பழ மரங்களும், மரக்கன்றுகளும் உள்ளன. இதில் 15 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் அலங்கார நீர்வீழ்ச்சி, சிறுவர்கள் விளையாட்டு பூங்கா, மரப்பாலம், மூங்கில் பண்ணை உள்பட பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவை பார்வையிட்டு சென்றனர். ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அருகில் உள்ள பழத்தோட்டத்துக்குள் சென்று பார்வையிட அனுமதி கிடையாது.
அரசு பழத்தோட்டம் சுற்றுலா திட்டத்தின் கீழ் இன்று (சனிக்கிழமை) முதல் சுற்றுலா மையமாகிறது என்றும், பொதுமக்கள் இலவசமாக சென்று பார்வையிடலாம் என்றும் குமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அசோக் மேக்ரின், கன்னியாகுமரி அரசு பழத்தோட்டம் தோட்டக்கலை அலுவலர் சரவணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பொதுமக்கள் அரசு பழத்தோட்டத்தில் பாதுகாத்து வளர்க்கப்படும் பழ செடிகள், மரங்கள் ஆகியவற்றை பார்வையிடலாம். ஆனால் அவற்றை பறிக்க அனுமதி கிடையாது.
Related Tags :
Next Story