மின்வாரிய அலுவலகத்திற்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம் வாபஸ் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு


மின்வாரிய அலுவலகத்திற்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம் வாபஸ் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 9 Nov 2018 10:45 PM GMT (Updated: 9 Nov 2018 7:55 PM GMT)

மின்வாரிய அலுவலகத்திற்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டது.

குளித்தலை,

குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இனுங்கூர் வடக்குத்தெருவில் சாலையின் நடுவில் மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் இவ்வழியே 108 ஆம்புலன்சு கூட வரமுடியவில்லை. மேலும் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லமுடியவில்லை. பொதுமக்களுக்கு இடையூறாக சாலையின் நடுவில் இருக்கும் மின் கம்பங்களை மாற்றி வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தி 4 வருடங்களாக மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக மின்கம்பங்களை மாற்றி அமைக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் குளித்தலை மின்சாரவாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டம் நேற்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இப்போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த போராட்ட குழுவினருக்கு குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ்குமார் அழைப்பு விடுத்தார். இதையடுத்து குளித்தலை பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த போராட்டக்குழுவினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு வட்டாட்சியர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மின்சாரவாரியம், வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துசெல்வன், ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் இனுங்கூர் வடக்குத்தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை 20 நாட்களுக்குள் அகற்றி சாலையோரத்தில் புதிய மின்கம்பங்கள் அமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து நேற்று நடைபெற இருந்த மலர்வளையம் வைக்கும் போராட்டம் வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாய தொழிலாளர் கள் சங்கத்தின் அறிவித்தனர்.

Next Story