மாவட்ட செய்திகள்

சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டருக்குள் புகுந்து அ.தி.மு.க.வினர் தாக்குதல் - ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம் + "||" + Sarkar film enters the premiere of the theater and attacking the AIADMK - Fans shatter and flow

சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டருக்குள் புகுந்து அ.தி.மு.க.வினர் தாக்குதல் - ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம்

சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டருக்குள் புகுந்து அ.தி.மு.க.வினர் தாக்குதல் - ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம்
தாராபுரத்தில் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டருக்குள் அ.தி.மு.க.வினர் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதனால் படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாராபுரம், 


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் சர்கார். இந்த திரைப்படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி, தமிழகம் முழுவதும் சர்கார் திரைப்படம் வெளியான திரையரங்குகள் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சர்ச்ரோட்டில் உள்ள எஸ்.வி.ராம் தியேட்டர் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. நகர செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சர்கார் திரைப்படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனே நீக்க வேண்டும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் மற்றும் படத்தயாரிப்பாளர் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. அதன் பிறகு தியேட்டர் முன்பு, நடிகர் விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அ.தி.மு.க.வினர் கிழித்து எறிந்தனர்.

அவமதிப்பு

பிறகு அங்கிருந்து புறப்பட்டு புதுமஜீத் தெருவில் இருந்த சத்யா தியேட்டருக்குள் சென்ற அ.தி.மு.க.வினர், அங்கு தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களில், நடிகர் விஜயின் உருவப்படத்தை அவமதிப்பு செய்து, பேனர்களை கிழித்து எறிந்தனர்.

பரபரப்பான இந்த சூழ்நிலையின் போது, அ.தி.மு.க. தொண்டர்களுக்கு செல்போன் மூலம் எஸ்.வி.ராம் தியேட்டரில் சர்கார் திரைப்படத்தின் காலை காட்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அ.தி.மு.க.வினர் அங்கிருந்து எஸ்.வி.ராம் தியேட்டருக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அ.தி.மு.க.வினர் கூட்டமாக தியேட்டருக்குள் செல்ல முயன்றபோது, அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், தியேட்டர் ஊழியர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அலுவலகத்திலிருந்து தியேட்டர் மேலாளர் திருலோகசந்தர் மற்றும் தியேட்டர் நிர்வாகிகள் சிலர் ஓடிவந்து, அத்துமீறி திரையரங்குக்குள் நுழைந்தவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.

அப்போது அங்கிருந்த அ.தி.மு.க.வினர், தியேட்டர் மேலாளர் திருலோகசந்தரையும் அவருடன் இருந்த நிர்வாகிகளையும் சரமாரியாக தாக்கிவிட்டு, தியேட்டருக்குள் புகுந்தனர். அப்போது எஸ்.வி.ராம் தியேட்டரில் இருந்த 2 தியேட்டர்களிலும் சர்கார் திரைப்படத்தின் காலை காட்சி நடைபெற்று கொண்டிருந்தது. அ.தி.மு.க. வினர் உள்ளே சென்று திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களை வெளியே செல்லுமாறு மிரட்டினார்கள். திரைப்படத்தை நிறுத்தச்சொல்லி கோஷம்போட்டனர்.

தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களும், விஜய் ரசிகர்களும் பயந்துபோய் அலறி அடித்துக்கொண்டு தியேட்டரை விட்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது வெளியே வந்த ரசிகர்கள் சிலர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த தியேட்டரில் குறைந்த அளவு போலீசார் இருந்ததால், இச்சம்பவத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இது பற்றிய தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்மணி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள்.

இந்த நிலையில் 2 தியேட்டர்களில் சர்கார் திரைப்படம் பார்ப்பதற்காக வந்த ரசிகர்கள், கட்டணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும் என கேட்டு, தியேட்டர் வளாகத்தைவிட்டு வெளியேற மறுத்ததால் மீண்டும் பதற்றம் நிலவியது. ரசிகர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சர்கார் திரைப்படத்தின் காலைக்காட்சிக்காக பெறப்பட்ட கட்டணத்தை, கண்டிப்பாக திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்ததை தொடர்ந்து ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையில் உள்ள தியேட்டரில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இங்கும் பிரச்சினை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்று கருதிய போலீசார் தியேட்டரின் முன்பு விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றியுள்ளனர். இதுகுறித்து போலீசாரிடம் விவரம் கேட்ட ரசிகர்களிடம் போலீசார் முறையான பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. உடனே போலீசாரை கண்டித்து தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேனர்களை அகற்றியதை கண்டித்தும், படத்தை நிறுத்த அ.தி.மு.க. வினர் முயற்சிப்பதாக கூறி அதனை கண்டித்தும் விஜய் ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விஜய் ரசிகர்களை கலைந்து போகச் செய்தனர். ரசிகர்களின் இந்த போராட்டத்தால், சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.


சேலம் புதிய பஸ்நிலையம் அருகே ஏ.ஆர்.ஆர்.எஸ். மல்டிபிளஸ் தியேட்டரில் நேற்று காலை சர்கார் படம் திரையிடப்பட்டது. இதை அறிந்த அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறைனர் தியேட்டர் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த சர்கார் பட பேனர் களை கிழித்தனர். பின்னர் அவர்கள் தியேட்டர் டிக்கெட் கவுன்ட்டர்கள் அருகே சென்று சர்கார் படத்தின் டிக்கெட்டை வினியோகம் செய்யக்கூடாது, படக்காட்சியை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் உடனடியாக டிக்கெட் கவுன்ட்டர்கள் மூடப்பட்டன. பின்னர் அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் தியேட்டர் மேலாளர் ஜாகீர் ஆகியோர் அ.தி.மு.க. வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சர்கார் படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு தான், காட்சிகள் திரையிடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இதற்கிடையில் காலை 10.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. இந்த பிரச்சினையால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து அ.தி.மு.க.வினர் 5 ரோடு அருகே உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றனர். ஆனால் அதற்குள் அங்கிருந்த சர்கார் பட பேனர்கள் அகற்றப்பட்டு விட்டன. மேலும் அந்த தியேட்டரிலும் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது. இதுதவிர சேலம் மாநகரில் சர்கார் படம் திரையிடப்பட்டிருக்கும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புடன், பேனர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.