தக்கலை அருகே உறவினர் வீட்டில் தொழிலாளி மர்ம சாவு


தக்கலை அருகே உறவினர் வீட்டில் தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 10 Nov 2018 3:30 AM IST (Updated: 10 Nov 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

உறவினர் வீட்டில் தொழிலாளி மர்மமாக இறந்தார். தொழிலாளியின் மர்ம சாவு குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு வருகிறார்கள்.

பத்மநாபபுரம், 

தக்கலை அருகே திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45), தொழிலாளி. இவருடைய மனைவி லதா (40). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். செந்தில்குமாருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதைதொடர்ந்து லதா கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இதற்கிடையே செந்தில்குமாருக்கு கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார் தனது வீட்டில் தங்காமல் அருகில் உள்ள கோவில் வட்டம் காலனியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கினார். இரவு உணவு சாப்பிடுவதற்காக உறவினர் எழுப்பிய போது, செந்தில்குமார் அசைவற்று கிடந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.

மேலும் தொழிலாளியின் மர்ம சாவு குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story