அரும்பாக்கத்தில் தனியார் சொகுசு பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி மேலாளர் கைது
அரும்பாக்கத்தில் உள்ள தனியார் சொகுசு பாரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக விடுதி மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான மதுபான சொகுசு பார் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம் தனிப்படை போலீசார், அந்த சொகுசு பாரின் உள்ளே அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.
அதில் அங்கு, ‘கரோக்கி’ என்ற ஒரு வகையான பாடலுக்கு ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் மதுபோதையில் நடனமாடி கொண்டிருந்தனர். சில பெண்கள், மேடையில் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனம் ஆடியபடி இருந்ததாக கூறப்படுகிறது.
2 பேர் கைது
அங்கிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் உரிய அனுமதி பெறாமல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து ஆபாச நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அந்த மதுபான சொகுசு பாரின் மேலாளர் கரன்கேபிரியல்(வயது 40) மற்றும் பார் ஊழியர் தாமோதரன்(32) ஆகிய 2 பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
அங்கு ஆபாசமாக நடனமாடிய 6 பெண்களை மீட்டு மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் இதுபோல் அனுமதி இன்றி வேறு எந்த சொகுசு பார்களிலாவது ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெறுகிறதா? என போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.
கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி போன்ற பகுதிகளில் சொகுசு பார்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் அதிகளவில் உள்ளது. அங்கு இதுபோன்ற ஆபாச நடனங்கள் நடைபெறுகிறதா? என போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story