திப்பு ஜெயந்தி விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு


திப்பு ஜெயந்தி விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 10 Nov 2018 3:30 AM IST (Updated: 10 Nov 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

திப்பு ஜெயந்தி விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கமல்பந்த் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

திப்பு ஜெயந்தி விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கமல்பந்த் தெரிவித்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு

கர்நாடக அரசு சார்பில் இன்று (சனிக்கிழமை) திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஆனால் திப்பு ஜெயந்தி கொண்டாடுவதற்கு பா.ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் திப்பு ஜெயந்திக்கு எதிராக நேற்று பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு(2017) திப்பு ஜெயந்தி விழாவின் போது குடகு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, இன்று நடைபெற உள்ள திப்பு ஜெயந்தி விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து கர்நாடக மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.கமல்பந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டப்படி நடவடிக்கை

கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ள திப்பு ஜெயந்தி விழாவுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக திப்பு ஜெயந்தி விழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க முன் எச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில போலீசாருடன், 3 கம்பெனி மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பெங்களூரு, குடகு, சித்ரதுர்காவில் தலா ஒரு கம்பெனி மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குடகு, சித்ரதுர்கா மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 107 பட்டாலியன் கர்நாடக ஆயுதப்படை போலீசார், நகர ஆயுதப்படை போலீசார் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திப்பு ஜெயந்தி விழாவுக்கு ஆதரவு தெரிவித்தோ, எதிர்ப்பு தெரிவித்தோ ஊர்வலம், போராட்டம் நடத்த அனுமதி இல்லை. சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கமல்பந்த் கூறினார்.

Next Story