டாஸ்மாக் கடையை அகற்ற கோரி 3 கிராம மக்கள் போராட்டம் - மந்தாரக்குப்பம் அருகே பரபரப்பு


டாஸ்மாக் கடையை அகற்ற கோரி 3 கிராம மக்கள் போராட்டம் - மந்தாரக்குப்பம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 10 Nov 2018 3:15 AM IST (Updated: 10 Nov 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

மந்தாரக்குப்பம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி 3 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மந்தாரக்குப்பம், 

மந்தாரக்குப்பம் அருகே உள்ள வடக்கு வெள்ளூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகில் உள்ள விளை நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு பயிர்களை நேற்று முன்தினம் டாஸ்மாக் அதிகாரிகள் அகற்றினர். பின்னர் அந்த இடத்தில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று அந்த டாஸ்மாக் கடைக்கு செல்வதற்கு வசதியாக, பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த வடக்கு வெள்ளூர், ரோமாபுரி, பூனங்குறிச்சி ஆகிய கிராம மக்கள், தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு பேரணியாக திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள் மந்தாரக்குப்பம் மீனாள், தெர்மல் சீனிவாசன், ஊ.மங்கலம் சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார், டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதை ஏற்காத கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அங்கு வந்த விருத்தாசலம் தாசில்தார் கவியரசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்கள், தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.

மேலும் குடிபிரியர்கள் போதை தலைக்கேறியதும் அவ்வழியாக செல்பவர்களுடன் தகராறு செய்யும் நிலை உருவாகும். அதனால் எங்கள் பகுதியில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

அப்போது தாசில்தார் கவியரசன், டாஸ்மாக் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றுமாறு அங்கிருந்த பணியாளர்களிடம் கூறினார். உடனே டாஸ்மாக் கடையை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story