நிதி நிறுவன அதிபரிடம் 57 கிேலா தங்கம் வாங்கிய வழக்கில் தலைமறைவு: நாளை விசாரணைக்கு ஆஜராக ஜனார்த்தனரெட்டிக்கு நோட்டீசு


நிதி நிறுவன அதிபரிடம் 57 கிேலா தங்கம் வாங்கிய வழக்கில் தலைமறைவு: நாளை விசாரணைக்கு ஆஜராக ஜனார்த்தனரெட்டிக்கு நோட்டீசு
x
தினத்தந்தி 9 Nov 2018 10:30 PM GMT (Updated: 9 Nov 2018 9:00 PM GMT)

நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய வழக்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக கூறி ஜனார்த்தனரெட்டிக்கு நோட்டீசு அனுப்பி பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெங்களூரு, 

நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய வழக்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக கூறி ஜனார்த்தனரெட்டிக்கு நோட்டீசு அனுப்பி பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜனார்த்தனரெட்டி தலைமறைவு

பெங்களூரூவை சேர்ந்த நிதி நிறுவன அதிபரான சையத் அகமது பரீத், பொதுமக்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து ரூ.600 கோடி வரை மோசடி செய்திருந்தார். இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நிதி நிறுவன அதிபர் பரீத் மீது அமலாக்கத்துறையிலும் வழக்குப்பதிவாகி உள்ளது. அந்த வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பேசி சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபர் பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசிய பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி, அதற்காக ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை வாங்கி இருந்தார்.

இதுதொடர்பாக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசாரிடம் சிக்காமல் ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகி விட்டார். தலைமறைவான அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார், ஜனார்த்தனரெட்டியை கைது செய்ய ஆந்திர மாநிலம் ஐதராபாத் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் முகாமிட்டு தீவிரமாக தேடிவருகிறார்கள். இதுதவிர பெங்களூரு, பல்லாரி, சித்ரதுர்காவில் அவர் பதுங்கி இருக்கலாம் என்று கருதி, அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு

அதே நேரத்தில் நிதி நிறுவன அதிபரிடம் இருந்து வாங்கிய 57 கிலோ தங்க கட்டிகள் பெங்களூரு சாளுக்கியா சர்க்கிள் மற்றும் பல்லாரி மாவட்டத்தில் உள்ள ஜனார்த்தனரெட்டியின் வீட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என்று கருதி போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆனால் 2 வீடுகளில் இருந்தும் தங்க கட்டிகள் கிடைக்கவில்லை. மேலும் தலைமறைவாக உள்ள ஜனார்த்தனரெட்டியை கைது செய்ய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஜனார்த்தனரெட்டி குறித்து, அவரது உறவினர்கள், நண்பர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் ஜனார்த்தனரெட்டி தலைமறைவாக இருந்து வருகிறார்.

இதற்கிடையில், ஜனார்த்தனரெட்டி மீது அரசியல் காரணங்களுக்காக குற்றச்சாட்டு கூறுவதாகவும், அவரிடம் விசாரணை நடத்த நோட்டீசு கூட போலீசார் அனுப்பாத நிலையில், அவரை கைது செய்ய போலீசார் நினைப்பது ஏன்? என்றும் ஜனார்த்தனரெட்டியின் வக்கீல் சந்திரசேகர் குற்றச்சாட்டு கூறி இருந்தார். இந்த நிலையில், நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க கட்டிகள் பெற்ற வழக்கில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகும்படி கூறி ஜனார்த்தனரெட்டிக்கு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இன்று ஆலோசித்து முடிவு

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ஜனார்த்தனரெட்டி சார்பில் தாக்கல் செய்த மனு 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை ஜனார்த்தன ரெட்டி விசாரணைக்கு ஆஜரானால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அவர் விசாரணைக்கு ஆஜராவாரா? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து ஜனார்த்்தனரெட்டி மீதுள்ள வழக்குகள் தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகி வரும் மூத்த வக்கீலான அனுமந்தராயா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "ஜனார்த்தனரெட்டி சார்பில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை 12-ந் தேதி நடைபெற உள்ளது. அதனால் போலீஸ் விசாரணைக்கு 11-ந் தேதி ஜனார்த்தனரெட்டி ஆஜராவது தொடர்பாக நாளை (அதாவது இன்று) ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்," என்றார்.

Next Story