திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில்: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை- ரூ.1 லட்சம் பறிமுதல்; 16 பேரிடம் விசாரணை
திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 16 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்,
தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சோதனையின் போது கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்கின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் பலர் தீபாவளி பண்டிகையையொட்டி லஞ்சம் பெற்றிருப்பதாகவும், மாதந்தோறும் லஞ்சம் பெறுவதாகவும் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் கவுசல்யா, வெங்கடேஸ்வரி மற்றும் போலீசார் நேற்று மாலை திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை 4 மணி நேரம் போலீசார் சரிபார்த்தனர். இதில் கணக்கில் வராமல் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 320 இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த பணத்தையும், சில ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், டாஸ்மாக் அலுவலக (கணக்கு) உதவி மேலாளர் கார்த்தி (வயது 30) மற்றும் ஊழியர்கள் உள்பட 16 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சோதனையின் போது அலுவலக ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும், வெளியாட்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story