மகத்தான வெற்றி பெற்று திருவாரூர் தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும் - அமைச்சர் ஆர்.காமராஜ்


மகத்தான வெற்றி பெற்று திருவாரூர் தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும் - அமைச்சர் ஆர்.காமராஜ்
x
தினத்தந்தி 10 Nov 2018 5:00 AM IST (Updated: 10 Nov 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

மகத்தான பெற்றி பெற்று திருவாரூர் தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமதுஅசரப் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அசோகன், கலையரசன், பாப்பா.சுப்பிரமணியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வாசுகிராமன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பல சோதனைகளை கடந்து மாபெரும் இயக்கமாக வளர்ந்து 47-வது ஆண்டில் காலடியெடுத்து வைத்துள்ளது. தமிழகத்தில் நீண்டகாலமாக ஆட்சி செய்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வமும் இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து செயலாற்றி கட்சியை பாதுகாத்து வழி நடத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவின் வழியில் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சியை கலைத்து விடுவோம் என தி.மு.க.வினர் கண்ட கனவு என்றும் நிறைவேறாது. ஜெயலலிதா மறைந்து 2 ஆண்டுகள் ஆக போகிறது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிச்சயம் நிறைவு செய்யும்.

இலவசத்தை நம்பாதீர்கள் என சினிமாவில் நடிப்பவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. இலவசத்தை வேண்டாம் என சொல்ல வேண்டியவர்கள் பொதுமக்கள் தான். ஜெயலலிதாவின் திட்டங்களை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. காசுக்காகவும், பணத்திற்காக நடிப்பவர்கள் கூறுவதை உணர்வுள்ள எந்த கட்சி தொண்டனும் ஏற்க மாட்டான். தற்போது காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு கட்சி மாற கூடிய வர் பழ.கருப்பையா. அ.தி.மு.க.வை பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை.

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற போகிறது. அ.தி.மு.க.வின் சாதனை திட்டங்களை சொல்லி வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். திருவாரூர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற போவது உறுதியானது என்றாலும், கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். மகத்தான வெற்றி பெற்று திருவாரூர் தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் கோபால் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், ஜீவானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆசைமணி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் மூர்த்தி வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.





Next Story