பொள்ளாச்சி-பாலக்காடு இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் - 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி அதிகாரிகள் ஆய்வு


பொள்ளாச்சி-பாலக்காடு இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் - 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 9 Nov 2018 10:15 PM GMT (Updated: 9 Nov 2018 10:29 PM GMT)

பொள்ளாச்சி-பாலக்காடு இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பொள்ளாச்சி,


பொள்ளாச்சி-பாலக்காடு, பொள்ளாச்சி-போத்தனூர், பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே இருந்த மீட்டர் கேஜ் ரெயில் பாதையை, அகலரெயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கியது. இந்த பணிகள் முடிந்த பிறகு கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து நவம்பர் மாதம் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கியது. பின்னர் 2016-ம் ஆண்டு முதல் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த வழித்தடத்தில் ஆனைமலை ரோடு, மீனாட்சிபுரம், முதலமடை, கொல்லங்கோடு, வடகன்னிகாபுரம், புதுநகரம் ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பொள்ளாச்சி-பாலக்காடு இடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் ரெயிலை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில், இயக்குவதற்கு சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இதையொட்டி பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு காலை 10.10 மணிக்கு என்ஜின் உள்பட 3 பெட்டிகளுடன் ரெயில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. பொள்ளாச்சிக்கு 10.45 மணிக்கு வந்தடைந்த ரெயிலில் முதன்மை பொறியாளர் மஸ்தான் ராவ், கோட்ட பொறியாளர் அனந்தராமன் மற்றும் ரெயில்வே பொறியாளர்கள் வந்தனர். சோதனை ஓட்ட ரெயிலில் பொருத்தப்பட்டு இருந்த நவீன கருவி மூலம் தண்டவாளத்தின் உறுதி தன்மை மற்றும் எந்தெந்த இடங்களில் தண்டவாளத்தில் அதிர்வுகள் உள்ளன? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வு அறிக்கை ஒரு வார காலத்திற்குள் பாலக்காடு கோட்ட அலுவலகத்தில் கொடுக்கப்படும். அதன்பிறகே ரெயிலை 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story