சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மூலம் ஈரோடு சம்பத் நகரில் புதிய பெட்ரோல் பங்க்; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்
சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மூலம் ஈரோடு சம்பத் நகரில் புதிய பெட்ரோல் பங்க்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறையின் கீழ் சிந்தாமணி கூட்டுறவு அங்காடிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகின்றன. மளிகைபொருட்கள் விற்பனை அங்காடி, பழம் விற்பனை அங்காடி, மருந்து கடை மற்றும் பெட்ரோல் பங்க்கும் சிந்தாமணி நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி தற்போது ஈரோடு சம்பத்நகர் பகுதியில் புதிய பெட்ரோல் பங்க் சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மூலம் திறக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு புதிய பெட்ரோல் பங்க்கினை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
விழாவில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மாவட்ட மேலாண்மை இயக்குனர் க.பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சு.ராமதாஸ், துணைப்பதிவாளர் ப.மணி, மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அதிகாரி அ.அழகிரி மற்றும் ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, முன்னாள் மண்டலத்தலைவர் ரா.மனோகரன், சிந்தாமணி முன்னாள் தலைவர் ஜெகதீசன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் முருகுசேகர், கோவிந்தராஜன், நிர்வாகிகள் வீரக்குமார், நந்தகோபால், ஜெயராமன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு சிந்தாமணி மூலம் திறக்கப்பட்டு உள்ள இந்த புதிய பெட்ரோல் பங்க் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் முகவராக செயல்படும். பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை நிலையமாக இது இருக்கும். பொதுமக்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் போட சிறந்த வசதியான நிலையமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் மோட்டார் ஆயில் வகைகள் தரமாகவும், சரியான அளவிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்தார்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறும்போது, ‘சிந்தாமணி நிர்வாகத்தின் மூலம் தூய்மையான பெட்ரோல், டீசல் வழங்கும் தரமான சேவை நிலையமாக இந்த பங்க் விளங்கும். இதன் மூலம் சிந்தாமணி கூட்டுறவு அங்காடி லாபகரமான அங்காடியாக செயல்படும். ஈரோடு மட்டுமின்றி, மாவட்டத்தின் அனைத்து நகரங்களிலும் இதுபோன்று பெட்ரோல் நிலையங்கள் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். காவல்துறையின் வேண்டுகோளின்படி சிந்தாமணி பெட்ரோல் பங்க்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன’ என்றார்.