சிறப்பு ஆசிரியர் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
சிறப்பு ஆசிரியர் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் சிந்தாமணி அங்காடி மூலம் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதால், தமிழகம் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதால், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு தடுக்கப்பட்டு உள்ளது. மழை நீர் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியாக இருக்கிறது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் இங்கு வருவதற்கு பாதுகாப்பான இடம் தமிழகம் என்ற அளவில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
ஈரோடு மாநகரத்தை பொறுத்தவரை இங்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து, பழுதடைந்த சாலைகளை சீரமைக்க முயற்சிகள் மேற்கொண்டு நிதி பெற்று இருக்கிறோம். விரைவில் ரூ.50 கோடி செலவில் சாலைகள் போடும் பணி நடைபெற உள்ளது. இதுபோல் ஈரோடு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் நிறைவேற இருக்கிறது. ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து திண்டல் வரை மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக ரூ.300 கோடி நிதி கேட்டு இருக்கிறோம்.
தமிழகத்தில் பள்ளிக்கூட மாணவ–மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்களை உருவாக்கும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அங்கு படிக்கும் மாணவ–மாணவிகள் பாடம் நடத்தும்போது பாடங்களை கிரகித்துக்கொள்ள முடியவில்லை என்றால், இ–மெயில் மூலம் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து தங்கள் வீடுகளில் சென்று படிக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த அடிப்படையில் வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். அதே போல், டிசம்பர் மாத இறுதிக்குள் 9 முதல் 12–ம் வகுப்பு வரையான அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும். கணினிகளுடன் இன்டர்நெட் இணைப்பும் வழங்கப்படும். இப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 300 பள்ளிகளில் இன்டர்நெட் இணைக்கப்பட்டு இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. 100 நூலகங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மதுரையில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. இப்படி படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இந்த வசதிகள் ஏற்படுத்தப்படும்.
வருங்காலத்தில் அதிகப்படியாக சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் எனப்படும் பட்டய கணக்காளர்களை(ஆடிட்டர்) உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பட்டயக்கணக்காளர் தேர்வுக்கான பயிற்சிகளை வழங்க வருகிற 16–ந் தேதி 300 ஆடிட்டர்களை கொண்டு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பட்டய கணக்காளர் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேர்வினை எப்படி எதிர்கொள்வது? முதன்மை தேர்வினை எவ்வாறு எழுதுவது? என்பதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். பிளஸ்–2 தேர்வுகள் முடிந்ததும், பட்டயக்கணக்காளர் தேர்வு எழுத விரும்பும் மாணவ–மாணவிகளுக்கு தேவையான பயிற்சியை ஆசிரியர்கள் வழங்குவார்கள். வணிகவியல் படிக்கும் 25 ஆயிரம் மாணவர்கள் இந்த பயிற்சிக்கு தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.
சிறப்பு ஆசிரியர் தேர்வில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை. அதில், தமிழ், ராணுவத்தினர் மற்றும் கணவரை இழந்த பெண்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் சான்றிதழ்களில் சில குளறுபடிகள் இருக்கின்றன என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் சார்பதிவாளர்கள் அல்லது கோட்டாட்சியர்களிடம்(ஆர்.டி.ஓ.) சான்றொப்பம் பெற்று ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அவர்கள் சான்றிதழ்கள் வாங்கி ஒப்படைக்க கால தாமதம் ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு நிறைவு பெறவில்லை. எனவேதான் காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. மற்றபடி சிறப்பாசிரியர் தேர்வில் தவறு நடந்துள்ளது என யாரேனும் குற்றச்சாட்டு ஏதும் தெரிவித்தால், அதனை விசாரித்து தீர்வு காண அரசு தயாராக உள்ளது. இந்த பிரச்சினையில் பணிஇடை நீக்கம் செய்யப்பட்ட அரசு அதிகாரி ஒருவர் வேண்டுமென்றே செயல்பட்டு வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஆசிரியர்கள் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையைப் பொறுத்தவரை, அரசு உத்தரவு வழங்கப்பட்டு இருக்கிறது. 9 முதல் பிளஸ்–2 வரையிலான வகுப்பாசிரியர்களுக்கு முதல்கட்டமாகவும், அதன்பின் படிப்படியாகவும் இது விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.