வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே ரெயில்வே இடத்தை ஆக்கிரமித்த 22 வீடுகள் அகற்றம் 2-வது நாளாக நடந்த பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே ரெயில்வே இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
வேலூர்,
வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே, கஸ்பா டிட்டர்லைன் பகுதியில் 72 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் பின்புறம் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. 72 வீடுகளில் வசித்த குடும்பத்தினரும் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் தங்கள் வீட்டுடன் இணைத்து கழிவறை, குளியலறை, சமையல் அறை உள்ளிட்டவற்றை கட்டி ஆக்கிரமித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அங்கு ஆய்வு நடத்த வந்த ரெயில்வே துறை அதிகாரிகள் திடீரென பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தனர். அப்போது அவர்கள் வீடுகள், கழிவறை, சமையல் அறை போன்றவற்றை இடித்து அகற்றினர். 22 வீடுகளை அவர்கள் இடித்தனர். வீடுகளில் இருந்த பொருட்களை அதன் உரிமையாளர்கள் அப்புறப்படுத்தும் முன்னரே வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் பல சேதமானது. மீதம் உள்ள 50 வீடுகளை அகற்றும் பணி மறுநாள் (அதாவது நேற்று) நடைபெறும் என கூறிவிட்டு சென்றனர். திடீரென ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனவே அவர்கள் அன்றிரவு தூங்க முடியாமல் தவித்தனர். இதுகுறித்து அவர்கள் முன்னாள் கவுன்சிலர் உஷாநந்தினியிடம் முறையிட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை அவரது தலைமையில் பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளின் முன்பு திரண்டு அவற்றை இடித்து அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த ரெயில்வே துறை அதிகாரிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வீட்டை காலி செய்ய 15 நாட்கள் கால அவகாசம் கொடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் உஷாநந்தினி கூறுகையில், “எந்தவித முன் அறிவிப்பு இன்றியும் அதிகாரிகள் வீட்டை இடித்துள்ளனர். பலர் வீடுகளில் வேலை செய்தனர். வீட்டில் உள்ள பொருட்களை அகற்ற நேரம் கொடுக்கவில்லை. பல பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. குடிநீர் குழாய் உடைந்துள்ளது. அதனை சரிசெய்ய செலவு ஆகும். மேலும் மின் தடை ஏற்பட்டதால் அவர்கள் அதையும் செலவு செய்து சரிசெய்ய வேண்டும். முன் கூட்டியே அறிவிப்பு கொடுத்து அகற்றி இருந்தால் பொருட்கள் சேதம் ஆகி இருக்காது. மக்களுக்கும் மனஉளைச்சல் ஏற்பட்டிருக்காது” என்றார்.
Related Tags :
Next Story