அரூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவி பரிதாப சாவு நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அரூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவி பரிதாப சாவு நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Nov 2018 5:00 AM IST (Updated: 10 Nov 2018 10:44 PM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே கிராமத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

இந்த மாணவி கடந்த 5-ந்தேதி தீபாவளி பண்டிகை விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தார். அன்று இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள புதர்கள் அடர்ந்த பகுதிக்கு மாணவி சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அதே ஊரை சேர்ந்த ரமேஷ் (வயது 20), சதீஷ் (22) ஆகிய 2 வாலிபர்கள் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அப்போது மாணவி சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன்பின் தடுமாறியபடி எழுந்து வீட்டிற்கு வந்த மாணவி தனக்கு நடந்த கொடுமை தொடர்பாக தாயாரிடம் கூறி கதறி அழுதார். இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

இதைத்தொடர்ந்து அந்த மாணவிக்கு அரூர் மற்றும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மாணவி தர்மபுரி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பொது மக்கள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை கைது செய்யக்கோரி கிராமப்பகுதியில் மலைவாழ் மக்கள் சங்க தலைவர் ராமசாமி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பகலில் தொடங்கிய மறியல் போராட்டம் நேற்று இரவு வரை தொடர்ந்து நடந்தது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையே தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தின் முன்பு திரண்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுதொடர்பாக மாணவியின் உறவினர்கள் கூறுகையில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான புகார் மீது போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தர்மபுரி உதவி கலெக்டர் சிவன்அருள், துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்தாத போலீசாரை கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரியில் மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாகவும், மாணவி உயிரிழந்ததற்கான காரணம் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தினார்கள்.

இதனால் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை நேற்று நடைபெறவில்லை. இந்த நிலையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story