ஓசூர் நகரில் மண் சாலைகள் அனைத்தும் ரூ.10 கோடியில் தார், சிமெண்டு சாலைகளாக தரம் உயர்த்த நடவடிக்கை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தகவல்
ஓசூர் நகரில் மண் சாலைகள் அனைத்தும், ரூ.10 கோடி மதிப்பில் தார் மற்றும் சிமெண்டு சாலைகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர் பால கிருஷ்ணரெட்டி தெரிவித்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் குறித்தும், சாலை விரிவாக்க பணிகள், மேம்பாலம் மற்றும் நடை மேம்பாலம் கட்டுதல் குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஓசூர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார். கலெக்டர் பிரபாகர் முன்னிலை வகித்தார். இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அமைச்சர் பேசியதாவது:-
தமிழகத்தில் வேகமாக முன்னேறி வரும் நகரங்களில், ஓசூர் ஒன்றாகும். இந்த ஊரை சுற்றி தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பெருகியுள்ள நிலையில், பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அதிக அளவில் உள்ளது. அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில், ஜி.ஆர்.டி. முதல் பாகலூர் வரை 4 வழி சாலை, ரூ.20 கோடியே 30 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. கனகபுரா, ராம்நகர், மாகடி, ஆனேக்கல், ஓசூர் வழியாக சுற்று வட்ட சாலை மற்றும் ஓசூரை சுற்றி வெளிவட்ட சாலை, சூளகிரி ரிங் ரோடு, பாகலூர் முதல் சர்ஜாபுரம் வரை சாலை விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ஓசூர் நகரில் ஜி.ஆர்.டி., சிப்காட், சோதனைசாவடி, சீதாராம் மேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓசூர் நகரில் மண் சாலைகள் அனைத்தும், ரூ.10 கோடி மதிப்பில் தார் மற்றும் சிமெண்டு சாலைகளாக தரம் உயர்த்தப்படும். ஓசூர் நகரை சுற்றியுள்ள சிறிய மற்றும் பெரிய ஏரிகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், அதிநவீன முறையில் மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கெலவரப்பள்ளி அணையிலிருந்து 25 ஏரிகளுக்கு சோலார் மின்சாரம் மூலம் நீர் நிரப்ப முதற்கட்ட ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இதில், ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் நாராயணா, மாசு கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் பழனிசாமி, நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் சென்னகிருஷ்ணன், விமல்ரவிக்குமார், தாசில்தார் முத்துப்பாண்டி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன், ஹோஸ்டியா சங்க தலைவர் வேல்முருகன், செயலாளர் வடிவேல் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஓசூர் சீத்தாராம் மேடு, பஸ் நிலையம், மூக்கண்டபள்ளி மற்றும் சிப்காட் பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள், மேம்பாலம் மற்றும் நடை மேம்பாலம் கட்டுதல் குறித்து, அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story