இளையமேடு மலைப்பகுதி இருளர் காலனிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


இளையமேடு மலைப்பகுதி இருளர் காலனிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Nov 2018 4:15 AM IST (Updated: 10 Nov 2018 11:03 PM IST)
t-max-icont-min-icon

இளையமேடு மலைப் பகுதி இருளர் காலனிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஒன்றியம், பச்சிகானப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட சந்தோஷ்பாபு சாம் நகரில் உள்ள இருளர் காலனியில் 83 குடும்பத்தினர் உள்ளனர். இவர்களில் 43 பேருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. இங்கு இட நெருக்கடி காரணமாக சோக்காடி பஞ்சாயத்து இளையமேடு மலைப்பகுதியில் 22 இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களில் பலர் ரேஷன் கார்டுகள், ஆதார் அட்டைகள், பட்டா போன்றவை கிடைக்காமல் உள்ளனர். குறிப்பாக இளையமேடு பகுதியில் வசிப்பவர்களுக்கு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லை.

இதனால் கரடு, முரடான பாதையில் தினமும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த பகுதிக்கு இன்னும் மின்சார வசதி கிடையாது. இரவில் மண்எண்ணைய் விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் கோலுபுரகொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 9 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். காலையில் நடந்து செல்லும் இவர்களை, மின்சார வசதி இல்லாததால் மாலையில் பெற்றோர்கள் அழைத்து செல்கின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் முப்பாட்டன் காலத்தில் இருந்து இங்கு வசித்து வருகிறோம். ஆனால் வனத்துறையினர் ஆட்சேபனை தெரிவித்து பட்டா வழங்காமல் உள்ளனர். எங்களுக்கு வாழ்வதற்கு தேவையான எந்த அடிப்படை வசதியும் இங்கு இல்லை. ஆனால் ஆடு, கோழி வளர்க்க இந்த இடம் வசதியாக உள்ளதால் இங்கேயே வாழ்ந்து வருகிறோம். அதனால் நாங்கள் இந்த இடத்தைவிட்டு போகமாட்டோம். எனவே, அரசு, எங்களுக்கு சாலை, மின்சாரம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story