மாவட்டத்தில் 44 மையங்களில், இன்று குரூப்-2 தேர்வை 12,128 பேர் எழுதுகிறார்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் குரூப்-2 தேர்வை 12,128 பேர் எழுதுகின்றனர்.
கிருஷ்ணகிரி,
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2 தேர்வு இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. நகராட்சி ஆணையர், சார் பதிவாளர் (கிரேடு 2), உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு விதமான பதவிகளில் காலியாக உள்ள 1,199 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வினை எழுத 12 ஆயிரத்து 128 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி கிருஷ்ணகிரியில் 28 மையங்களில் 7 ஆயிரத்து 748 பேரும், ஓசூரில் 14 மையங்களில் 3,918 பேரும், தேன்கனிக்கோட்டையில் 3 மையங்களில் 462 பேரும் எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்த மையங்களில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சிறப்பு பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படை கிருஷ்ணகிரிக்கு 6, ஓசூருக்கு 3, தேன்கனிக்கோட்டைக்கு 1 என 10 பறக்கும் படைகளும், 10 நடமாடும் குழுக்களும், 44 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் முதன்மை கண்காணிப்பாளர்களாக 44 பேரும், அறை கண்காணிப்பாளர்களாக 606 பேரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 44 மையங்களுக்கும் 44 வீடியோ கிராபர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அனைத்து மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story