கிருஷ்ணகிரியில் பயங்கரம்: கழுத்தை அறுத்து பெண் படுகொலை அண்ணன் மகனுக்கு போலீசார் வலைவீச்சு


கிருஷ்ணகிரியில் பயங்கரம்: கழுத்தை அறுத்து பெண் படுகொலை அண்ணன் மகனுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Nov 2018 4:45 AM IST (Updated: 10 Nov 2018 11:28 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த பெண் கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். தப்பியோடிய அண்ணன் மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி,
இதுகுறித்து பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலை கணபதி தெருவை சேர்ந்தவர் ராஜசேகர், தொழிலாளி. இவருடைய மனைவி ராணி (வயது 58). கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் 5-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஜோதிலிங்கம். இவரும், ராணியும் அண்ணன், தங்கை ஆவர். ஜோதிலிங்கத்தின் மகன் சுரேஷ் (51).

இந்தநிலையில் சுரேஷ் நேற்று முன்தினம் தனது அத்தை ராணி வீட்டுக்கு சென்று செலவுக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ராணி மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராணியை குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்து விழுந்த அவரை, சுரேஷ் கத்தியால் கழுத்தை அறுத்தார்.

பின்னர் சுரேஷ் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் ராணி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ராணியின் சகோதரி சரஸ்வதி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுரேசை வலைவீசி தேடி வருகிறார்கள். செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த அத்தையை அண்ணன் மகன் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story