ராயக்கோட்டை அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த யானை உயிருடன் மீட்பு


ராயக்கோட்டை அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த யானை உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 10 Nov 2018 11:00 PM GMT (Updated: 10 Nov 2018 6:07 PM GMT)

ராயக்கோட்டை அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த யானை உயிருடன் மீட்கப்பட்டது.

ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ராயக்கோட்டை அருகே உள்ளது ஊடேதுர்க்கம் காப்புகாடு. இந்த காட்டில் ஏராளமான யானைகள் உள்ளன. அவை அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்வது தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அருகில் உள்ள உப்புபள்ளம் வழியாக கடூர், தாண்டரகுண்டா, உப்புபள்ளம் பகுதிக்கு வந்தன.

அங்கு விவசாய பயிர்களை யானைகள் மிதித்தும், தின்றும் நாசம் செய்தன. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் ராயக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு வந்து பட்டாசுகளை வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை விரட்டினார்கள்.

அந்த நேரம் யானைகள் கூட்டத்தில் இருந்து 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று தவறி, அருகில் உள்ள உப்புபள்ளத்தைச் சேர்ந்த பாப்பண்ணா என்பவரின் 40 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. அதில் 5 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. கிணற்றுக்குள் யானை தவறி விழுந்ததும், ஆக்ரோஷத்தில் பிளியது. மேலும் கிணற்றுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் தண்ணீரில் அங்கும் இங்கும் தத்தளித்தது.

இந்த நிலையில் கிணற்றுக்குள் இருந்து யானையின் சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் தீபக் பில்க், வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ், ஓசூர் வனச்சரகர் சீதாராமன், வனவர் முருகேசன், வன காப்பாளர் முருகன் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த இடத்துக்கு ராட்சத பொக்லைன் வரவழைக்கப்பட்டது. பின்னர் யானை விழுந்த கிணற்றின் அருகில் பள்ளம் தோண்டப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டது. இரவு 10 மணி அளவில் தொடங்கிய பணி, காலை 6 மணி அளவில் நிறைவடைந்தது. யானை வெளியே வர வழி ஏற்படுத்தப்பட்டதும், யானை அந்த பாதை வழியாக நடந்து கிணற்றில் இருந்து மேலே ஏறி வந்தது.

கிணற்றுக்குள் இருந்து வந்ததும் யானை மகிழ்ச்சியில் சுற்றும், முற்றும் பார்த்து துதிக்கையை தூக்கி பிளிறியபடி ஊடேதுர்க்கம் காட்டை நோக்கி ஓடியது. கிணற்றில் இருந்து வெளியே வந்த யானை ஊடேதுர்க்கம் காட்டில் தனது கூட்டத்துடன் சேர்ந்து விட்டதா? அல்லது தனியாக சுற்றுகிறதா? என்று வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். ராயக்கோட்டை அருகே உணவுக்காக காட்டில் இருந்து வந்த யானை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story