மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சலை கண்காணிக்க 45 மருத்துவ குழு சுகாதாரத்துறை இணை இயக்குனர் சேகர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை கண்காணிக்க 45 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் சேகர் கூறினார்.
நாமக்கல்,
தமிழக பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பயிற்சி) டாக்டர் சேகர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு தனியாக வார்டு அமைக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்ட அவர், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், நோயாளிகளிடமும், சிகிச்சை முறைகள், மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளும் விதம், டாக்டர்களின் கவனிப்பு குறித்தும் கேட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில், அவர்கள் குணமாகி வீடு திரும்புவார்கள்.
அதேபோல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனும் அனுமதிக்கப்பட்டு உள்ளான். அவனும், நல்ல நிலையில் இருக்கிறான். விரைவில் குணமாகி வீடு திரும்புவான்.
அடுத்த 2 மாதங்களுக்கு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை கண்காணித்து தடுப்பு நடவடிக்கையை தொடரும் வகையில், 45 மருத்துவ குழுவினர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த குழுவில் ஒரு டாக்டர், நர்சு உள்பட 5 பேர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.
பன்றி காய்ச்சலுக்கு உரிய 15 ஆயிரம் மாத்திரைகள் இருப்பு உள்ளது. அதேபோல், ஊசியும் 2 ஆயிரம் இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் என்ற அச்சுறுத்தல் இல்லை. மேலும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 76 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் உஷா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story