மாவட்ட செய்திகள்

கமுதி –சென்னை அரசு விரைவு பஸ் திடீர் நிறுத்தம்; பயணிகள் தவிப்பு + "||" + Kamuthi-Chennai Government Quick Bus Terminal

கமுதி –சென்னை அரசு விரைவு பஸ் திடீர் நிறுத்தம்; பயணிகள் தவிப்பு

கமுதி –சென்னை அரசு விரைவு பஸ் திடீர் நிறுத்தம்; பயணிகள் தவிப்பு
கமுதியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு விரைவு பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

கமுதி,

கமுதியில் இருந்து அபிராமம், பார்த்திபனூர், மானாமதுரை, சிவகங்கை வழியாக சென்னைக்கும், சென்னையில் இருந்து கமுதிக்கும் அரசு போக்குவரத்துக்கழக பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் குறைந்த கட்டணத்தில் சென்னை சென்று வந்தனர். இந்த நிலையில் சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டு அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டது. இதனிடையே இந்த பஸ்சும் எவ்வித அறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தீபாவளி பண்டிகையின் போது அரசு பஸ் இல்லாமல் ஏழை–எளிய மக்கள் தனியார் பஸ்சை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. வழக்கமாக சென்னைக்கு ரூ.540 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த தனியார் பஸ்களில் தீபாவளி சமயத்தில் ரூ.1,300 முதல் ரூ.1,600 வரை கட்டணம் வசூலித்தனர். இதனால் குடும்பத்தோடு சென்னை செல்ல வேண்டியவர்கள் தவிப்பிற்கு ஆளானார்கள்.

இதுகுறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பயணிகளின் கோரிக்கையை ஏற்று கமுதி கிளையில் இருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மீண்டும் விரைவு பஸ் இயக்க வேண்டும் என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது சேவை அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளனர். மேலும் உடனடியாக அரசு பஸ் இயக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்துவது என்றும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.