சர்கார் பட பிரச்சினை: தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால் தொண்டர்கள் கொதித்தெழுவார்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


சர்கார் பட பிரச்சினை: தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால் தொண்டர்கள் கொதித்தெழுவார்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 11 Nov 2018 5:00 AM IST (Updated: 11 Nov 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

தலைவர்களின் திட்டங்களை கொச்சைப்படுத்தினால் தொண்டர்கள் கொதித்தெழுவார்கள் என்று கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறினார்.

கோவை,
திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவைக்கு வந்தார். அவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் ஹரிகரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதி உள்பட 234 தொகுதிகளிலும் மக்கள் நல பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. டி.டி.வி.தினகரன் தான் எதிர் கட்சிகளுடன் சேர்ந்து அ.தி.மு.கவை உடைக்க சதி செய்கிறார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அறிவிக்கும் போது பொதுமக்கள் அனை வரிடமும் செல்போன் இல்லை. இப்போது அனைத்து தரப்பு மக்களும் செல்போன் வைத்து உள்ளனர். இருப்பினும் விலையில்லா செல்போன் வழங்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறையில் உள்ள 3 பேரை விடுவிக்க தமிழக அரசு வலியுறுத்தியது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த இறுதி முடிவை கவர்னர் தான் எடுக்க வேண்டும். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் பச்சோந்தி போல் செயல்படுகிறார். பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது ஸ்டாலினுக்கு அது மதவாத கட்சியாக, தீண்டத்தகாத கட்சியாக தெரிய வில்லையா?. மத்திய பா.ஜனதா அரசில் தி.மு.க.வினர் மந்திரிகளாக இருந்தனர். பின்னர் பா.ஜனதா சறுக்கிய போது அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றனர்.

ஆனால் அ.தி.மு.க. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதும், தற்போதும் கொள்கை பிடிப்புடன் செயல்படுகிறது. தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களை ஆதரிக்கிறோம். யார் நல்லது செய்யவில்லையோ அவர்களை ஆதரிப்பது இல்லை. மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதற்காக மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்.

காலத்திற்கு ஏற்றபடி சந்திரபாபு நாயுடுவும் பச்சோந்தி போல மாறிக்கொள்பவர். அவர் 4½ ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்து விட்டு தற்போது தேர்தல் வரக்கூடிய நேரத்தில் பா.ஜனதா கட்சியை எதிர்க்கிறார். பாலாறு தான் பல மாவட்டங்களுக்கு நீராதாரமாக உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியதால், தமிழகத்தில் இந்த ஆறு வறண்டு காணப்படுகிறது.

மு.க.ஸ்டாலின், சந்திரபாபுநாயுடுவை சந்தித்த போது ஏன் இது குறித்து அவர் கேள்வி எழுப்பவில்லை. மேலும் துரைமுருகன் இதுகுறித்து சட்டமன்றத்தில் கேள்வி கேட்கிறார். ஆனால் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த போது ஏன் நேரில் கேட்க வில்லை. பாலாற்று தடுப்பணைகளை இடித்து விட்டு தண்ணீர் கொடுங்கள் என்று ஏன் தி.மு.க.வினர் கேட்க வில்லை. அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மட்டுமே நினைக்கின்றனர். மக்கள் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லை.

தமிழகத்தில் சர்கார் திரைப்பட பேனரை அ.தி.மு.க. வினர் கிழிக்கவில்லை. தலைவர்கள் கொண்டு வரும் திட்டங்கள் கொச்சைப்படுத்தப்படும் போது உணர்வுள்ள தொண்டர்கள் கொதித்தெழுவார்கள். சர்கார் பட பிரச்சினை சுமுகமாக முடிந்துவிட்டது. இனி இதை ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம். சில நடிகர்கள் விலையில்லா பொருள் குறித்து தவறான தகவலை பரப்பி வருகின்றனர். தமிழக அரசின் விலையில்லா பொருட்களை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் உறவினர்கள் கூட வாங்கி இருக்கின்றனர். அந்த பட்டியலை நாங்கள் எடுத்து வைத்திருக்கின்றோம்.

ஒரு திரைப்படம் எடுக்க ரூ.900 கோடி வரை செலவு செய்கிறார்கள். இதற்கான பணம் திரையுலகினருக்கு எப்படி வருகிறது. ஒரு நடிகர் ரூ.50 கோடி வரை சம்பளம் பெற்றாலும் பொதுமக்களுக்காக என்ன நலத்திட்டங்களை செய்கிறார்கள். திரையரங்குகளில் 100 ரூபாய் டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை அவர்கள் உறிஞ்சுகின்றனர். அதிக விலைக்கு டிக்கெட்டு விற்பனை செய்வது குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்கிறது.

தமிழக அரசு விலையில்லா கல்வியையும் வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் 72 அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. இதன்மூலம் உயர்படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை 46.8 சதவீதமாக தமிழகத்தில் உள்ளது. விவசாய நிலங்களில் செல்போன் கோபுரம் அமைக்கப்படுவது குறித்து விவசாயிகளுடன், மின்வாரிய அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண்பார்.

படத்திற்கு படம் கோடி, கோடியாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் மக்கள் நலனுக்காக என்ன செய்தார்கள். கமல்ஹாசன் தனது படத்துக்கு பிரச்சினை வந்த போது, இந்த நாட்டை விட்டு செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற கூறினார். நாட்டை விட்டு செல்கிறேன் என்று கூறுபவர் எப்படி நாட்டுக்கு தலைவராக முடியும். தனது பிரச்சினையை தீர்க்க முடியாத அவர் எப்படி மக்கள் பிரச்சி னையை தீர்ப்பார். மேலும் அவர் 64 வயசு வரை திரைப்படத்தில் நடித்து விட்டு, இப்போது அரசியல் நாடகம் ஆடுகின்றார். 40 ஆண்டுகள் நடித்த கமலை மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. சினிமாதுறையில் கமல்ஹாசனுக்கு மக்கள் ஓய்வு கொடுத்துவிட்டார்கள்.

தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தும் தி.மு.க.வினர் இதுவரை அதுகுறித்து எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. நாங்கள் சொல்வதை ஊடகம் போடுவதில்லை. ஆனால் மற்ற கட்சி யினர் சொல்வதை ஊடகங்கள் பெரிதாக போடுகின்றீர்கள். தலைமைசெயலகம் கட்டப்பட்ட விவகாரத்தில் ஏன் தி.மு.க.வினர் கோர்ட்டில் தடை ஆணை வாங்கி கொண்டு இருக்கிறார்கள். வழக்கை நடத்த வேண்டியது தானே. தமிழக அமைச்சர்களை விட முன்னாள் தி.மு.க. அமைச்சர்கள் மீதுதான் அதிக வழக்குகள் உள்ளன.

வானிலை மையம் பலமுறை அறிவிப்பு கொடுத்தாலும் மழை வரவில்லை. இருந்தாலும் மழை வந்தால் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளுக்கு தமிழக அரசு தயாராகவே இருக்கின்றது. டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க அரசு தேவையான முன்னெச்சரிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களும் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் ஆஸ்பத்திரிக்கு செல்ல பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஒருசிலர் அலட்சியமாக இருப்பதால் காய்ச்சல் பரவுகிறது.

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயக படுகொலை. இலங்கையில் உள்ள தமிழக மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். மத்திய அரசு அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். தமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பதை இந்த அரசு பரீசிலனை செய்து வருகின்றது. ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது கேரள போலீசாரின் பொறுப்பு.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், சரோஜா,பெஞ்சமின், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், ஏ.கே.செல்வராஜ் எம்.பி., முன்னாள் எம்.பி.தியாகராஜன், அம்மன் அர்சுணன் எம்.எல்.ஏ. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் நிகழ்ச்சியை முடித்து விட்டு கோவை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 10 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story