வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை ஆய்வுக்கூட்டம் தமிழகத்தில் 9,500 மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் அமைச்சர் உதயகுமார் தகவல்
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் 9,500 மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் 9,500 மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;-
36 இடங்கள்
அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர் மழை, பெருமழையினால் ஏற்படும் இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் வடகிழக்கு பருவமழை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 9 ஆயிரத்து 500 மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மழையினால் பாதிக்கப்படும் 36 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் முதல்நிலை பொறுப்பாளர்கள், அலுவலர்கள், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பார்வையிட்டனர்
முன்னதாக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக வைக்கப்பட்டு இருந்த டெங்கு கொசு மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியையும், பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் பாட்டில்களில் செடிகள் வைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி கண்காட்சியினையும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக மீட்பு பொருட்களை பார்வையிட்டு அவற்றின் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த கூட்டத்தில் சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் ஆப்லிஜான்வர்க்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story