கோவையில் தனியார் நிறுவனங்கள் வாடகை சைக்கிள் திட்டத்தை அமல்படுத்த தயக்கம்


கோவையில் தனியார் நிறுவனங்கள் வாடகை சைக்கிள் திட்டத்தை அமல்படுத்த தயக்கம்
x
தினத்தந்தி 11 Nov 2018 4:00 AM IST (Updated: 11 Nov 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வாடகை சைக்கிள் திட்டத்தை அமல்படுத்த தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.

கோவை,

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சைக்கிள்களுக்கு தனி பாதை அமைத்து இயக்க திட்டமிடப்பட்டது. அந்த திட்டத்தை ‘ஓபோ’ என்ற சைக்கிள் நிறுவனம் சோதனை அடிப்படையில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தியது. முதல் ஒரு மாதம் இலவசமாகவும் அதன் பின்னர் குறைந்த வாடகையிலும் சைக்கிள்கள் விடப்பட்டன. ஆனால் வாடகைக்கு சைக்கிள் எடுத்த பெரும்பாலானவர்கள் அவற்றை திருப்பி கொண்டு வரவில்லை. சில சைக்கிள்கள் உடைக்கப்பட்டன. இதனால் அந்த நிறுவனம் வாடகைக்கு சைக்கிள் விடும் திட்டத்தை ரத்து செய்து விட்டு கோவையை விட்டு வெளியேறியது.

இந்த நிலையில் கோவையில் வாடகைக்கு சைக்கிள் விடும் திட்டத்தை கொண்டு வர பெங்களூருவை தலைமையிடமாக கொண்டுள்ள ஒரு தனியார் நிறுவனம் முன்வந்தது. இந்த திட்டத்தை முதல் கட்டமாக வடவள்ளி பகுதியில் அமல்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டது. அந்த பகுதியில் எத்தனை பேர் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பார்கள்? வாடகை எவ்வளவு நிர்ணயிக்கலாம் என்பது பற்றி அந்த தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த நிலையில் அங்கு வாடகைக்கு சைக்கிள்களை விடும் திட்டத்தை அமல்படுத்த அந்த நிறுவனம் தற்போது தயக்கம் காட்டி வருகிறது.

வாடகைக்கு சைக்கிள்களை எடுத்து செல்பவர்கள் அவற்றை திருப்பி கொண்டு வராமல் இருந்தாலோ, உடைத்து விட்டாலோ அந்த இழப்புக்கான பொறுப்பை கோவை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த நிறுவனம் நிபந்தனை விதித்தது. அதற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படு கிறது.

இதே போல கோவை மாநகர போலீஸ் நிர்வாகமும் பொறுப்பு ஏற்றுக் கொள்ளுமா? என்றும் அந்த நிறுவனம் கேட்டதாக தெரிகிறது. அதற்கும் கோவை மாநகர போலீசார் ஒப்புக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து வாடகை சைக்கிள் திட்டத்தை அமல்படுத்த தனியார் நிறுவனம் தயங்கி வருகிறது. இதே போல சீனாவை சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டது. ஆனால் அந்த நிறுவனமும் தற்போது தயக்கம் காட்டுகிறது.

இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டுள்ள தனியார் நிறுவனம் முதல் கட்டமாக 500 சைக்கிள் களை வாடகைக்கு விட திட்டமிட்டிருந்தது. மக்களின் தேவையை கருத்தில் கொண்டு அதை 5 ஆயிரம் சைக்கிள்களாக உயர்த்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அந்த சைக்கிள்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்தாலும் அதை வாடகைக்கு எடுத்துச் செல்பவர்கள் அகற்றி விடுகிறார்கள். அப்படி தான் ஆர்.எஸ்.புரத்தில் வாடகை சைக்கிள்களில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ். கருவிகள் அகற்றப்பட்டு உடைக்கப்பட்டன.

‘ஓபோ’ சைக்கிள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு புதிய நிறுவனம் தொலைந்து போகும் சைக்கிள்களுக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கேட்டது. ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே அந்த நிறுவனம் தனது திட்டத்தை கைவிட்டு விட்டது.

பெங்களூரு, ஐதராபாத் நகரங்களில் வாடகை சைக்கிள் திட்டத்திற்கான நிதியை அந்தந்த மாநகராட்சி நிர்வாகங்கள் தான் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் அங்கும் தற்போது சைக்கிள்கள் திருட்டுபோவதாக கூறப்படுகிறது. கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாடகை சைக்கிள் விடும் திட்டத்துக்கு மாநகராட்சி நிதி ஒதுக்க முடியாது. தனியார் நிறுவனங்கள் அதற்கான நிதியை ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story