சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்: 151 பயனாளிகளுக்கு ரூ.36.18 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்


சேலத்தில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்: 151 பயனாளிகளுக்கு ரூ.36.18 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரோகிணி வழங்கினார்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:30 PM GMT (Updated: 10 Nov 2018 7:43 PM GMT)

சேலத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 151 பயனாளிகளுக்கு ரூ.36.18 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை விரைந்து தீர்க்கும் வகையில் கோட்டங்கள் அளவிலான மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்த இந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்களை அளித்தனர்.

இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 437 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக மொத்தம் 151 பயனாளிகளுக்கு ரூ.36 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

இந்த மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-

மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அவற்றை உடனுக்குடன் நிறைவேற்றி தர வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக வருவாய் கோட்டங்கள் அளவில் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வியாழக்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கோட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ளும் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெறப்படும் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.

மக்கள் அரசு அலுவலர்களை தேடி செல்வதைவிட அரசு அலுவலர்கள் மக்களை தேடி சென்று அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிவதற்காக வருவாய் கோட்டங்கள் தோறும் இச்சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி பேசினார்.

நிகழ்ச்சியில் சேலம் உதவி கலெக்டர் (பொறுப்பு) ஜெகநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story