பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் தொலைபேசி சேவை முற்றிலும் பாதிப்பு


பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் தொலைபேசி சேவை முற்றிலும் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Nov 2018 11:30 PM GMT (Updated: 10 Nov 2018 8:00 PM GMT)

கெல்லீசில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், அதற்குட்பட்ட பகுதிகளில் தொலைபேசி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கெல்லீசில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி கோட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மின் கட்டுப்பாட்டு அறையில் நேற்று திடீரென மின் கசிவு ஏற்பட்டது. இந்த மின் கசிவால் கட்டுப்பாட்டு அறையில் இருந்த டிரான்ஸ்பார்மரில் தீ பிடித்து எரிந்தது. மேலும் இந்த தீ அந்த அறை முழுவதும் பரவ தொடங்கியது.

இதையடுத்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் மின் வாரிய ஊழியர்கள், பி.எஸ்.என்.எல். மின் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் அனைத்து மின்சார தொடர்புகளையும் துண்டித்தனர். கீழ்ப்பாக்கத்தில் இருந்து தீயணைப்பு நிலைய அதிகாரி எழுமலை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து பி.எஸ்.என்.எல். மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தொலைபேசி சேவை பாதிப்பு

இந்த தீ விபத்தில் மின் கட்டுப்பாட்டு அறை முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதனால் கோட்ட அலுவலகத்துக்கு வரும் அனைத்து மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. மின் இணைப்பு இல்லாததால் கோட்ட அலுவலகத்தில் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் 17 கிளை அலுவலகங்களும், அதில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இணைப்புகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. தீ விபத்தில் சேதமடைந்த ‘டிரான்ஸ்பார்மர்’ மற்றும் கட்டுப்பாட்டு அறையை சரி செய்யும் வரை கெல்லீஸ் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொலைபேசி இணைப்புகள் செயல்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்கள் அவதி

கெல்லீஸ் பி.எஸ்.என்.எல். கோட்ட அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் திடீரென தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டதால் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு நேரில் சென்று புகார் அளித்தனர். மேலும் கோட்ட அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடு மற்றும் அலுவலக தொலைபேசி சேவைகள் செயல்படாததால் தொலைபேசி மூலம் செயல்படும் இணையதள இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

Next Story