கிரண்பெடியின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் தொலைவில் இல்லை - நாராயணசாமி பேட்டி


கிரண்பெடியின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் தொலைவில் இல்லை - நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 11 Nov 2018 4:30 AM IST (Updated: 11 Nov 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடியின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பிரதமர் நரேந்திரமோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ரூ.2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த நடவடிக்கை 50 நாட்களில் வெற்றிபெறாவிட்டால் தண்டனையை ஏற்க தயாராக இருப்பதாக பிரதமர் கூறினார். ஆனால் இப்போது வாய்மூடி மவுனமாக உள்ளார். இதனால் நாட்டின் வளர்ச்சி 2 சதவீதம் குறைந்துள்ளது.

எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு போன்ற அமைப்புகளை பயன்படுத்துகிறார்கள். வருமான வரித்துறை, புலனாய்வு துறைகளை தங்கள் கட்டுப்பட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டையும் விட்டுவைக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

எது எப்படி இருந்தாலும் இறுதியில் ஜனநாயகம்தான் வெல்லும். சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் இதை உறுதி செய்துள்ளன. நாட்டு மக்கள் மதச்சார்பற்ற அணியை நம்பி உள்ளனர். தவறான வெளியுறவு கொள்கையால் நாடு பின்னோக்கி செல்கிறது.

ரோடியர், பாரதி, சுதேசி மில்கள் மற்றும் பல்வேறு அரசு சார்பு நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளமாக பட்ஜெட்டில் ரூ.326 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் முதலீட்டு மானியம், நிர்வாக செலவுக்கு என ஒட்டுமொத்தமாக ரூ.786 கோடி ஒதுக்கப்பட்டது. ரங்கசாமி முதல்–அமைச்சராக இருந்தபோது இந்த நிறுவனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை பணிக்கு அமர்த்தியதால் நஷ்டம் ஏற்பட்டது.

இந்த நிறுவனங்களை லாபத்தில் இயக்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயன் பரிந்துரை வழங்கி உள்ளார். அதனை படிப்படியாக நடைமுறைப்படுத்துவோம்.

கவர்னருக்கு கொடுக்கப்பட்ட நிதி அதிகாரத்தை அமைச்சரவைக்கு பகிர்ந்தளிக்க மத்திய உள்துறை இட்ட உத்தரவினை கவர்னர் கிரண்பெடி மதிக்காமல் உள்ளார். அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க அனுப்பிய கோப்பில் கேள்விகள் கேட்டு திருப்பி அனுப்புகிறார். கதர்வாரியம், சாலை போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மக்கள் சேவைக்காக தொடங்கப்பட்டவை. அவற்றில் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. அவற்றிலும் லாபம் ஈட்ட கவர்னர் கூறுகிறார். நஷ்டத்தில் இயங்கும் நிறுவன தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்ப சொல்கிறார்.

மக்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு கவர்னருக்கு இல்லை. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ளது. தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லாமல் முடிவெடுக்கும் நிலையில் நாங்கள் உள்ளோம். கவர்னரின் அதிகாரம் குறித்து முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில் விரைவில் தீர்ப்பு வரும். அவரது அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

ஜிப்மரில் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய ஜிப்மர் கிளையை ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் சேதராப்பட்டில் கொண்டுவர 50 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த வேலைகள் நடந்து வருகின்றன. இதற்கான அடிக்கல்நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. புதுவை மருத்துவக்கல்லூரிகளில் படித்து எம்.பி.பி.எஸ். படிப்புகளை முடிக்காதவர்கள் 10 ஆண்டுகளில் முடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதை புதுவை பல்கலைக்கழகம் 8 ஆண்டுகளாக குறைந்தது. இதுதொடர்பாக துணைவேந்தருடன் பேசியதால் அதை மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்க உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story