தலைமறைவான பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி, போலீஸ் விசாரணைக்கு ஆஜர் அதிகாரிகள் சரமாரி கேள்வி


தலைமறைவான பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி, போலீஸ் விசாரணைக்கு ஆஜர் அதிகாரிகள் சரமாரி கேள்வி
x
தினத்தந்தி 11 Nov 2018 5:00 AM IST (Updated: 11 Nov 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

தலைமறைவாக இருந்த பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி போலீஸ் விசாரணைக்காக நேற்று நேரில் ஆஜரானார்.

பெங்களூரு, 

அமலாக்கதுறை வழக்கை சுமூகமாக முடிக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி போலீஸ் விசாரணைக்காக நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

பெங்களூருவை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் சையத் அகமது பரீத்.

ரூ.20 கோடி பேரம்

அதிகவட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை பெற்று, அதனை திரும்ப கொடுக்காமல் ரூ.600 கோடி வரை மோசடி செய்ததாக இவர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கி்ல் நிதி நிறுவன அதிபர் சயைத் அகமது பரீத் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அதோடு நிதிநிறுவன அதிபர் சையத் அகமது பரீத் மீது அமலாக்கத்துறையிலும் ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்்கை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் பேசி சுமூகமாக முடித்து கொடுப்பதாக பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி கூறியதுடன், இதற்காக ரூ.20 கோடி பேரம் பேசியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையொட்டி நிதி நிறுவன அதிபர் சையத் அகமது பரீத்திடம் இருந்து ரூ.18 கோடி மதிப்புள்ள 57 கிேலா தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்றிருப்பதாக போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

தலைமறைவு

இந்த ரூ.20 கோடி பேர வழக்கில் விசாரணைக்காக ஜனார்த்தனரெட்டி, அவரது உதவியாளர் அலிகான் ஆகியோரை போலீசார் தேடியபோது அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இந்த வழக்கில் அலிகானுக்கு கோர்ட்டு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி இருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக பெங்களூருவில் நகைக்கடை வைத்து இருக்கும் ரமேஷ் கட்டாரியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் பல்லாரியில் நகைக்கடை வைத்துள்ள மற்றொரு ரமேசை போலீசார் கைது செய்தார்கள். அவரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜனார்த்தனரெட்டியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

விசாரணைக்கு ஆஜராக நோட்டீசு

இந்த தனிப்படை போலீசார், ஜனார்த்தனரெட்டியை பெங்களூரு, பல்லாரி, சித்ரதுர்கா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் தேடினார்கள். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்கவில்லை. அதே நேரத்தில் நிதி நிறுவன அதிபரிடம் இருந்து பேரமாக பெற்ற 57 கிலோ தங்க கட்டிகளுக்காக பெங்களூரு, பல்லாரியில் உள்ள ஜனார்த்தனரெட்டியின் வீடுகளில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில், பேரமாக 57 கிலோ தங்க கட்டிகள் பெற்ற வழக்கில் 11-ந் தேதிக்குள் (அதாவது இன்று) விசாரணைக்கு ஆஜராகும்படி ஜனார்த்தனரெட்டிக்கு நேற்று முன்தினம் குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினார்கள். மேலும் விசாரணைக்கு ஆஜராக 48 மணிநேரம் காலஅவகாசமும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதனால் இன்றைக்குள் (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு அவர் ஆஜராவாரா? அல்லது முன் ஜாமீன் கிடைத்ததும் விசாரணைக்கு ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்ததாக தேடப்பட்ட ஜனார்த்தனரெட்டி தான் பேசிய வீடியோ ஒன்றை நேற்று மதியம் வெளியிட்டார். அதில், இன்று(அதாவது நேற்று) போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக அவர் பேசி இருந்தார். இதையடுத்து, பெங்களூரு சிட்டி மார்க்கெட் அருகே மைசூரு ரோட்டில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு நேற்று மதியம் பத்திரிகையாளர்கள், தொலைகாட்சி நிருபர்கள் திரண்டனர்.

ஜனார்த்தனரெட்டி ஆஜர்

இந்த நிலையில நேற்று மாலை 4.15 மணியளவில் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு ஜனார்த்தனரெட்டி காரில் வந்தார். அவருடன் வக்கீல் சந்திரசேகரும் உடன் வந்தார். மேலும் ஜனார்த்தனரெட்டி தனது சொந்த காரில் வராமல், தன் மீதுள்ள வழக்குகளில் ஆஜராகி வரும் மூத்த வக்கீல் அனுமந்தராயாவுக்கு சொந்தமான காரில் அவர் வந்திருந்தார். குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் விசாரணை அதிகாரியான உதவி போலீஸ் கமிஷனர் வெங்கடேஷ் பிரசன்னா முன்பு ஜனார்த்தனரெட்டி ஆஜரானார். பின்னர், குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார், துணை போலீஸ் கமிஷனர் கிரீஸ் மற்றும் போலீசார் ஜனார்த்தனரெட்டியிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையை போலீசார் வீடியோ மூலம் பதிவு செய்தார்கள்.

விசாரணையின் போது, ஜனார்த்தனரெட்டியிடம் நிதி நிறுவன அதிபர் சையத் அகமது பரீத்திடம் பேரமாக ரூ.18 கோடிக்கு தங்க கட்டிகள் வாங்கியது உண்மையா? அமலாக்கத்துறையில் சையத் அகமது பரீத் மீதான வழக்கை சுமூகமாக முடித்து கொடுக்க ரூ.20 கோடி பேரம் பேசினீர்களா? சையத் அகமது பரீத் நிதி நிறுவனம் நடத்தி ரூ.600 கோடி மோசடி செய்ததில் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட சரமாரியாக கிடுக்கிப்பிடி கேள்விகளை போலீஸ் அதிகாரிகள் கேட்டனர். போலீஸ் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு ஜனார்த்தனரெட்டி பதிலளித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

நிதி நிறுவன அதிபரிடமும்...

இதற்கிடையில், ஜனார்த்தனரெட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த அதேவேளையில் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு நிதி நிறுவன அதிபரான சையத் அகமது பரீத்தும் நேற்று மாலையில் தனது வக்கீலுடன் வந்தார். ஜனார்த்தனரெட்டி மற்றும் பரீத்திடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஏனெனில் அவர்கள் 2 பேரையும் ஒன்றாக வைத்து விசாரித்தால் தான், இந்த வழக்கில் உண்மையை கண்டறிய முடியும் என்று கருதி, 2 பேரிடமும் ஒன்றாக விசாரணை நடத்தப்பட்டது.

ஜனார்த்தனரெட்டியிடம் விசாரணை இரவு 9 மணிக்கும் மேலும் நீடித்தது. நிதி நிறுவன அதிபரிடம் 57 கிலோ தங்க கட்டிகள் பெற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ஜனார்த்தனரெட்டி திடீரென்று விசாரணைக்கு ஆஜரான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story