கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி பங்கேற்கவில்லை


கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி பங்கேற்கவில்லை
x
தினத்தந்தி 11 Nov 2018 4:45 AM IST (Updated: 11 Nov 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

விதான சவுதாவில் பலத்த பாதுகாப்புக்கு இடையே கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது.

பெங்களூரு, 

விதான சவுதாவில் பலத்த பாதுகாப்புக்கு இடையே கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

பா.ஜனதா கடும் எதிர்ப்பு

கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா 10-ந் தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியது. இதை கண்டித்து போராட்டம் நடத்துவதாக பா.ஜனதா அறிவித்தது. இந்த விழாவில் பா.ஜனதா மத்திய மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா அறிவித்தார்.

அழைப்பிதழில் கூட தங்களின் பெயரை சேர்க்கக்கூடாது என்று அவர்கள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர். இந்த நிலையில் திட்டமிட்டப்படி திப்பு ஜெயந்தி விழா நடைபெறும் என்று மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் துறை செய்திருந்தது.

பங்கேற்க இயலவில்லை

இந்த நிலையில் கர்நாடக அரசின் கன்னட மற்றும் கலாசாரத்துறை சார்பில் திப்பு ஜெயந்தி விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

முதல்-மந்திரி குமாரசாமி டாக்டர்களின் அறிவுரைப்படி ஓய்வு எடுக்கிறார். அவரது சார்பில் நான் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளேன். முன்னாள் மந்திரி சென்னிப்பா உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் சென்றுவிட்டார். இதன் காரணமாக அவராலும் இந்த விழாவில் பங்கேற்க இயலவில்லை.

எதிர்த்து போரிட்டார்

திப்பு சுல்தான் நாட்டிற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டார். அவர் மீது பா.ஜனதாவினர் தேவை இல்லாத விஷயங்களை வெளிப்படுத்துகிறார்கள். அவரது தியாகத்தை போற்றும் வகையில் திப்பு ஜெயந்தி விழா, அரசு விழாவாக நடத்தப்படுகிறது.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் பேசினார்.

இந்த விழாவில் கன்னடம் மற்றும் கலாசாரத்துறை மந்திரி ஜெயமாலா பேசுகையில், “ஒரு நபர் வெறும் பணம் மற்றும் அதிகாரத்தால் வரலாற்றை உருவாக்க முடியாது. சாமானிய மக்களை முன்னேற்ற பாடுபட்டவர்கள் மட்டுமே வரலாற்றில் இடம் பெற முடியும். அத்தகைய நபர்களில் திப்பு சுல்தானும் ஒருவர் ஆவார்” என்றார்.

பல்வேறு தியாகங்களை செய்தார்

இதில் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மந்திரி ஜமீர்அகமதுகான் பேசும்போது, “மைசூரு புலி திப்பு சுல்தான் ஜெயந்தியை மாநில அரசு இன்று (அதாவது நேற்று) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கொண்டாடுகிறது. அவர் நாட்டிற்காக பல்வேறு தியாகங்களை செய்தார்” என்றார்.

இந்த விழாவில் முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரி பங்கேற்கவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்கள் வாசிக்கப்பட்டன. விழாவில் ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

திப்பு ஜெயந்தி விழாவையொட்டி விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. விதான சவுதாவுக்கு வந்தவர்கள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அதே போல் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் திப்பு ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் மாவட்டங்களின் பொறுப்பு மந்திரிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக குடகு, சித்ரதுர்கா, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கைது

திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்தினர். சிக்கமகளூருவில் தடையை மீறி வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஊர்வலமாக சென்ற பா.ஜனதாவை சேர்ந்த சி.டி.ரவி எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். அதுபோல் குடகு மாவட்டத்தில் திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பிய எம்.எல்.ஏ.க்கள் அப்பச்சுரஞ்சன், கே.ஜி.போப்பையா உள்பட நூற்றுக்கணக்கான பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்.

கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் அசம்பாவித சம்பவஙகள் எதுவும் இன்றி இந்த விழா அமைதியாக நடந்து முடிந்தது.

Next Story