அரசியல் ஆதாயம் பெறவே திப்பு ஜெயந்தி விழாவை பா.ஜனதா எதிர்க்கிறது தேவேகவுடா குற்றச்சாட்டு
அரசியல் ஆதாயம் பெறவே திப்பு ஜெயந்தி விழாவை பா.ஜனதா எதிர்ப்பதாக தேவே கவுடா குற்றம்சாட்டினார்.
பெங்களூரு,
அரசியல் ஆதாயம் பெறவே திப்பு ஜெயந்தி விழாவை பா.ஜனதா எதிர்ப்பதாக தேவே கவுடா குற்றம்சாட்டினார்.
திப்பு ஜெயந்தி விழாவை கர்நாடக அரசு நடத்துவது குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திப்பு ஜெயந்தி விழா
திப்பு ஜெயந்தி விழாவை நடத்துவது இன்று, நேற்று தொடங்கியது அல்ல. நானும், சித்தராமையாவும் ஒன்றாக இருந்த காலத்திலேயே இந்த விழாைவ நடத்தினோம். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, மாநில அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா நடத்துவது தொடங்கப்பட்டது. அது தற்போது ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
மடிகேரி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்கள் பதற்றமான பகுதிகள் ஆகும். பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது. நாட்டில் பா.ஜனதாவின் செல்வாக்கு சரிந்து வருகிறது. இந்த நிலையில் அரசியல் ஆதாயம் பெறவே பா.ஜனதா திப்பு ஜெயந்தி விழாவை எதிர்க்கிறது.
உடல்நிலையில் சற்று பாதிப்பு
ராமர்கோவில் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அதை பற்றி பேசுவது தவறு. ஆனால் இதுகுறித்து பேசி மக்களை தூண்டிவிடுகிறார்கள். முதல்-மந்திரி குமாரசாமி இடைத்தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அதன் காரணமாக அவரது உடல்நிலையில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி அவருக்கு நான் அறிவுறுத்தினேன். டாக்டர்களும் ஆலோசனை கூறினர். இதையடுத்து அவர் ஓய்வில் உள்ளார். திப்பு ஜெயந்தி விழாவில் எங்கள் கட்சியை சேர்ந்த மந்திரிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story