மணல் குவாரி அமைக்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் மண்டியிட்டு போராட்டம் - விருத்தாசலத்தில் பரபரப்பு


மணல் குவாரி அமைக்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் மண்டியிட்டு போராட்டம் - விருத்தாசலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Nov 2018 4:00 AM IST (Updated: 11 Nov 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

மணல் குவாரி அமைக்கக்கோரி விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே வி.குமாரமங்கலம் மற்றும் மணவாளநல்லூரில் உள்ள மணிமுக்தா ஆற்றில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி அமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணவாளநல்லூரில் மாட்டுவண்டிகளுக்கான மணல் குவாரி அமைக்கப்பட்டு இயங்கி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த மணல் குவாரி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டது. இதை கண்டித்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று அனைத்து கிராம மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க சிறப்பு தலைவர் வெற்றிவேல் தலைமையில் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் சப்- கலெக்டர் பிரசாந்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

விருத்தாசலம் சுற்று வட்டாரங்களை சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் கடந்த 18 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தியதன் பலனாக மணவாளநல்லூரில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்கப்பட்டது.

அந்த குவாரியில் 200-க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளிச்சென்று பயனடைந்து வந்தனர். இந்நிலையில் திடீரென அந்த குவாரி மூடப்பட்டுள்ளதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மணவாளநல்லூர் மற்றும் வி.குமாரமங்கலம் ஆகிய இடங்களிலும் உடனடியாக அரசு மாட்டுவண்டி மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரசாந்த், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்ற மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story