புலி சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து ‘அரசு அமைத்த விசாரணை கமிட்டி கேலிக்கூத்தானது’ உத்தவ் தாக்கரே தாக்கு


புலி சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து ‘அரசு அமைத்த விசாரணை கமிட்டி கேலிக்கூத்தானது’ உத்தவ் தாக்கரே தாக்கு
x
தினத்தந்தி 11 Nov 2018 12:00 AM GMT (Updated: 10 Nov 2018 10:23 PM GMT)

புலி சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த அரசு அமைத்த கமிட்டி கேலிக்கூத்தானது என உத்தவ் தாக்கரே சாடினார்.

மும்பை,

புலி சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த அரசு அமைத்த கமிட்டி கேலிக்கூத்தானது என உத்தவ் தாக்கரே சாடினார்.

கமிட்டி அமைப்பு

யவத்மால் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 13 பேரை வேட்டையாடியதாக கூறப்படும் பெண் புலி ‘அவ்னி’யை சமீபத்தில் வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் வனத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவார் அளித்த பதிலில், மனிதவேட்டையாடிய புலியை உயிருடன் பிடிக்கவே விரும்பியதாகவும், வனத்துறையினரை தாக்க முயன்ற காரணத்தாலேயே அதை கொல்ல நேர்ந்ததாகவும் கூறினார்.

ஆனாலும் சர்ச்சை தொடர்வதால் பெண் புலி சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த மராட்டிய அரசு சார்பில் 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று தனது கருத்தை தெரிவித்த ஆளும் கூட்டணியை சேர்ந்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

கேலிக்கூத்து

புலி கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர்களே தற்போது விசாரணை கமிட்டியில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதை பார்க்க கேலிக்கூத்தாக உள்ளது. இது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

புலி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு வனத்துறை மந்திரி சுதீர் முங்கண்டிவார் பொறுப்பு இல்லை என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். பின்னர் ஏன் துல்லிய தாக்குதலில் (சர்ஜிகல் ஸ்டிரைக்) கலந்து கொள்ளாத பிரதமர் மோடி அதன் புகழை மட்டும் தனக்கானது என்று கூறுகிறார்?.

இவ்வாறு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.

கீழ்த்தரமான அரசியல் வேண்டாம்

இதற்கு பதில் அளித்து சுதீர் முங்கண்டிவார் கூறுகையில், “ உத்தவ் தாக்கரே கமிட்டியை கேலிக்கூத்தாக நினைப்பாராயின், அவரது தலைமையிலேயே விசாரணை கமிட்டி அமைக்க மராட்டிய அரசு தயாராக உள்ளது.

ஆளும் கூட்டணியில் உத்தவ்தாக்கரே முக்கியமானவர். அவர் விசாரணை கமிட்டிக்கு தலைமை ஏற்க விரும்பவில்லை எனில், ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்க வேண்டும் என்று நான் முதல்-மந்திரியிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளேன் என்பதை உணரவேண்டும். இந்த பிரச்சினையில் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடவேண்டாம்” என்றார்.

Next Story