மிராரோட்டில் டியூசன் ஆசிரியையை கொலை செய்தவர் சிக்கினார் தன்னை அவமானப்படுத்தியதால் கொன்றதாக வாக்குமூலம்


மிராரோட்டில் டியூசன் ஆசிரியையை கொலை செய்தவர் சிக்கினார் தன்னை அவமானப்படுத்தியதால் கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 Nov 2018 5:15 AM IST (Updated: 11 Nov 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

மிராரோட்டில் டியூசன் ஆசிரியையை குத்தி கொலை செய்தவரை உத்தரபிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மிராரோட்டில் டியூசன் ஆசிரியையை குத்தி கொலை செய்தவரை உத்தரபிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

டியூசன் ஆசிரியை கொலை

தானே மாவட்டம் மிராரோட்டை சேர்ந்தவர் ரித்தா ரோனி (வயது60). இவர் டியூசன் எடுத்து வந்தார். தனியாக வசித்து வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரித்தா ரோனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

வாலிபர் கைது

அப்போது, அதே குடியிருப்பில் வசித்து வரும் சோனு வர்மா (34) என்ற வாலிபர் சந்தேகப்படும் வகையில் வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மேலும் அவர் தலைமறைவானதும் தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், அவர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கான்பூர் சென்ற போலீசார் உள்ளூர் போலீசாரின் உதவியோடு சோனு வர்மாவை அதிரடியாக கைது செய்து அழைத்து வந்தனர்.

வாக்குமூலம்

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ரித்தா ரோனியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

ரித்தா ரோனியின் காரை ஒரு நாள் தருமாறு கேட்டேன். அப்போது அவர் எனக்கு கார் தர மறுத்தது மட்டுமல்லாமல் என்னை அவமானப்படுத்தி விட்டார். இதனால் அவர் மீது கோபம் ஏற்பட்டது. அவரை பழிவாங்குவதற்காக கடந்த 4-ம் தேதி அவரது வீட்டிற்கு தீபாவளி பலகாரம் கொடுக்க செல்வது போல் சென்றேன். அப்போது நான் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தேன். பின்னர் கான்பூர் தப்பி சென்று விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் வாலிபர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 14-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.

Next Story